திருகோணமலை துறைமுகத்தில் இந்திய நாசகாரி “ராணா“
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் ராணா திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை சென்றடைந்த இந்தியக் கடற்படைக் கப்பலை, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறையில் வரவேற்றனர்.
147 மீற்றர் நீளமான இந்த நாசகாரிக் கப்பலில் கப்டன் கே.பி.சிறீசன் தலைமையிலான 300 மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.
திருகோணமலையில் தங்கியிருக்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நல்லெண்ணத்தை வளர்க்கவும் சிறிலங்கா கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல பயிற்சித் திட்டங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் இந்திய கடற்படையினர் ஈடுபடவுள்ளனர்.
இந்திய நாசகாரி கப்பலில் சிறிலங்கா கடற்படை வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதுடன், இந்திய கடற்படை கப்பலின் பணியாளர்களுக்காக சிறப்பு படகுப் படை தலைமையகத்தில் உருவகப்படுத்துதல் பயிற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு, ஐஎன்எஸ் ராணா ஓகஸ்ட் 14 ஆம் திகதி திருகோணமலையை விட்டு புறப்பட உள்ளது.
