முள்ளிக்குளத்தில் காற்றாலைகளுக்கு 7 நிறுவனங்கள் விண்ணப்பம்
மன்னார்- முள்ளிக்குளத்தில் இரண்டு, 50 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கு, 7 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மின்சார சபையினால் கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டதற்கு அமைய, 19 தரப்புகள், அதற்கான ஆவணங்களைப் பெற்றிருந்தன.
ஏழு தரப்புகள், ஏலத் தொகைகளை குறிப்பிட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன என்று அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
விண்ணப்பித்துள்ள அனைத்து தரப்பினரும் உள்நாட்டவர்கள் என்றும், அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை மன்னார் தீவில் காற்றாலைகளை அமைப்பதற்கு எதிராகவும், கனிய மணல் அகழப்படுவதற்கு எதிராகவும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முள்ளிக்குளத்தில் புதிய காற்றாலைகளை நிறுவ விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.