சிறிலங்காவிடம் இருந்து டோனியர் விமானத்தை மீளப் பெற்றது இந்தியா
சிறிலங்கா விமானப்படையின் 3ஆவது இலக்க கடல்சார் கண்காணிப்பு ஸ்குவாட்ரனில், இடம்பெற்றிருந்த இந்திய கடற்படையின் டோனியர் விமானம் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தயாரிப்பாக டோனியர் 228 கண்காணிப்பு விமானத்தை சிறிலங்கா விமானப்படையில் இருந்து விடுவிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
எனினும், இதுபற்றி சிறிலங்கா விமானப்படை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அதேவேளை, இந்தியாவின் டோனியர் விமானம், சிறிலங்கா விமானப்படையில் இருந்து விடுவிக்கப்பட்டதை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் பிராங்ளின் ஜோசப், உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த டோனியர் விமானம் நாடு திரும்பியதை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா விமானப்படையில், SMR-846 என்ற பதிவு இலக்கத்துடன், இந்தியக் கடற்படையின் டோனியர் 228 விமானம் 2022ஆம் ஆண்டு தொடக்கம் இணைக்கப்பட்டிருந்தது.
கடல்சார் மீட்பு, தேடுதல், மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த இந்த விமானம், நேற்று தமது பணியாளர் குழுவுடன், பாக்கு நீரிணையைக் கடந்து பறந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, சிறிலங்கா விமானப்படையின் கடல்சார் கண்காணிப்பு விமானங்களின் பலம் குறைந்துள்ளது.
தற்போது அதில் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட, B-360ER மற்றும் அவுஸ்ரேலியாவினால் வழங்கப்பட்ட B-350 பீச் கிங் விமானங்கள் மட்டுமே உள்ளன.
இந்தியாவிடம் இருந்து இரண்டு டோனியர் விமானங்களை பெற்றுக் கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
அதற்கமைய, 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்தியக் கடற்படையின் டோனியர் விமானம் சிறிலங்கா விமானப்படைக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த விமானத்தின் குத்தகைக் காலம் ஒரு ஆண்டினால் நீடிக்கப்பட்டது.
குத்தகைக்காலம் முடிவுற்ற நிலையில் இந்த விமானம் நாடு திரும்பியுள்ளது.
இந்த விமானமும், இந்திய கடற்படை பணியாளர்கள் குழுவும் திருகோணமலையில் தங்கியிருந்து, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டதுடன், சிறிலங்கா விமானப்படை பணிக்குழுவுக்கும் பயிற்சிகளை வழங்கியது.
அதேவேளை இந்தியாவினால் டோனியர் விமானங்களை வழங்குவது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்த தயங்குகின்றனர்.
