சோமரத்னவின் கடிதம்- தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
செம்மணிப் புதைகுழிகள் பற்றிய உண்மைகளை சர்வதேச விசாரணையில் வெளிப்படுத்தத் தயாராவுள்ளதாக சோமரத்ன ராஜபக்ச கூறியுள்ள நிலையில், அதற்குரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அதிபரும், சர்வதேச சமூகமும் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன்,
‘செம்மணி பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பது வரவேற்கத்தக்க விடயம்.
மரணதண்டனை விதிக்கப்பட்ட அவர், இப்போது உண்மையைச் சொல்வதற்குத் தயாராக இருக்கிறார்.
இருப்பினும், இந்த நாட்டுக்குள் உண்மைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில், தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதுவதனாலேயே அவர் சர்வதேச விசாரணையைக் கோருகிறார்.
இந்த சர்வதேச விசாரணையையே நாம் 2010 ஆம் ஆண்டிலிருந்து கோரி வருகிறோம்.
தற்போது சிங்களத் தரப்பிலிருந்து, அதுவும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவரிடமிருந்து அந்தக் கோரிக்கை வந்திருக்கிறது.
தனக்கு ஆணையிட்ட உயரதிகாரிகள், படுகொலைக் குற்றங்களைப் புரிந்தவர்கள் உள்ளிட்ட சகலரது விபரங்களையும் வெளிப்படுத்துவதற்குத் தயார் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
எனவே நீதிக்கான பயணத்தில் சர்வதேசத்தின் தலையீடு அல்லது பங்களிப்பு இல்லாவிடின், அது உண்மையான நீதியாக இருக்காது என சிங்களவர்களே கூறுமளவுக்கு இன்று நிலைமை மாறியிருக்கிறது.
சிறிலங்கா அரசாங்கம் இதனை முதலில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுமாத்திரமன்றி மீண்டும் மீண்டும் உள்ளகப்பொறிமுறை எனக்கூறி சகல தரப்பினரையும் ஏமாற்றுவதை விடுத்து, நீதியானதொரு சர்வதேசப் பொறிமுறையை நோக்கி நகரவேண்டும்.
அப்பொறிமுறை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரக் கூடியதாக இருக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.
அதேவேளை, இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன்,
கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கு விசாரணைகளின் போதே செம்மணியில் சுமார் 300 – 600 பேர் வரை புதைக்கப்பட்டிருப்பதாக சோமரத்ன ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் அப்போதையஅதிபர் சந்திரிக்கா குமாரதுங்க அதனை ஒரு முக்கிய விடயமாகக் கருதி அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.
அப்போது உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் பலர் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
இந்த விவகாரத்தை ஒரு சர்வதேச கட்டமைப்பின் முன்னிலையில் விசாரிப்பதன் ஊடாக மாத்திரமே சகல உண்மைகளையும் வெளிக்கொணர முடியும்.
ஆனால் சிறிஙல்கா இராணுவத்தைப் பாதுகாப்பதற்கு முற்படும் அரசாங்கம், சர்வதேச விசாரணைக்கான நகர்வுகளை ஒருபோதும் முன்னெடுக்காது.
இந்த விடயத்தை சரியாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் அதிபரும், அரசாங்கமும் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும்’ எனக் குறிப்பிட்டார்.
புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,
சோமரத்ன ராஜபக்ச சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது இந்த விவகாரத்தில் மிகமுக்கிய திருப்புமுனையாகும்.
இதுகுறித்து சிறிலங்கா அதிபர் உரியவாறான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், இதுகுறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும்.
நியாயமான சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,
கிருஷாந்தி குமாரசாமி படுகொலை குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்கிரம, சிறிலங்கா அதிபர், அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதன் நகல்களை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் அனுப்பியுள்ளார். ஐ.நாவுக்கும் அனுப்பி உள்ளார்.
இன்று இந்த கடிதம், அனுரகுமார திசாநாயக்கவின் நீதிமன்றத்தில் நிற்கிறது.
சர்வதேச கண்காணிப்பு விசாரணைக்கு அதிபர் அனுர உடன் பட வேண்டும்.
அதிலே லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும்.
ஆனால், இவற்றுக்கு முன், இன்று சிறையில் இருக்கும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவுக்கு, உடனடியாக அதி உயர் சிறப்பு பாதுகாப்பு வழங்கபட வேண்டும்.
இது தொடர்பில், அரசியல் சிவில் சமூகமாக நாம் கூட்டு மேல் நடவடிக்கைக்கு தயாராவோம்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் நாம் அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுப்போம்.
சித்திரவதை, பாலியல் வல்லுறவு, படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என்கிறார்.
சிறிலங்கா வரலாற்றில் இராணுவத்தை சேர்ந்த நபர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என இதற்கு முன்னர் கூறவில்லை.
ஆகவே, இதை ஏற்று மேல் நடவடிக்கை எடுக்க அனுர குமார அரசாங்கம் முன் வர வேண்டும்.
சர்வதேச நெருக்குதல்களை முறையாக தர ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகமும் முன் வர வேண்டும்.
இதை செய்ய முடியா விட்டால், இது ஒரு அரசாங்கமாகவோ, அது ஒரு ஐ.நா சபையாகவோ இருக்க முடியாது.
இது இன்று சர்வதேச விவகாரம் ஆகி விட்டதை அனுர குமாரவும், வோல்கர் டர்க்கும் உணர வேண்டும்.
அதனால்தான், அனுரவுக்கு செம்மணி விவகாரம் ஒரு அக்னி பரீட்சை என்று அன்றே சொன்னேன். இன்று மீண்டும் கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.