கடல்சார் பாதுகாப்புச் சேவையில் சிறிலங்கா கடற்படை – அமைச்சரவை அனுமதி
செங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கு சிறிலங்கா கடற்படைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் அறிவு மற்றும் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு சிறிலங்கா கடற்படைக்கு ஒப்புதல் வழங்குவது பொருத்தமானது எனக் கருதப்படுவதாக அவர் கூறினார்.
சிறிலங்கா கடற்படை முன்னர் இதுபோன்ற சேவையை வழங்கிய போதும், பின்னர், தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சர்வதேச கடல்சார் போக்குவரத்திற்கு கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக, 2010 ஆம் ஆண்டில், சர்வதேச கடல்சார் அமைப்பு செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் சோமாலிய கடலைச் சுற்றியுள்ள பகுதிகளை அதிக ஆபத்து வலயமாக அறிவித்தது.
இந்த அதிக ஆபத்து வலயத்துக்குள் நுழையும் வணிகக் கப்பல்கள் வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து ஆயுதமேந்திய கடல்சார் காவலர்களின் சேவைகளைப் பெறுகின்றன என்று நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
2013 ஆம் ஆண்டில் சர்வதேச கடல்சார் அமைப்பு அதிக ஆபத்து வலயம் என்ற பிரகடனத்தை நீக்கிய போதிலும், வணிகக் கப்பல்கள் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களின் சேவைகளைத் தொடர்ந்து பெறுகின்றன.
இத்தகைய ஆயுதமேந்திய கடல்சார் காவலர்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களைப் பயன்படுத்தி மேற்படி கடல் பகுதிக்குள் நுழையும் கப்பல்களை ஏற்றிச் செல்வதற்கும், புறப்படும் கப்பல்களில் இருந்து இறங்குவதற்கும் பயன்படுத்துகின்றனர் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்,