செம்மணியில் இதுவரை 56 எலும்புக்கூடுகள் – இரண்டாவது புதைகுழியும் பிரகடனம்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்று மேற்கொள்ளப்பட்ட 12 ஆவது நாள் அகழ்வின் முடிவில், 56 மனித எலும்புகூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, 50 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள், முழுமையான அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பல மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகள் தென்படுகின்ற போதும் அவை இன்னமும் அடையாளப்படுத்தி இலக்கமிடப்படவில்லை என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
அதேவேளை, சித்துப்பாத்தி பகுதியில் இரண்டாவது தடயவியல் அகழ்வாய்வுத் தளம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியை முதலாவது தடயவியல் அகழ்வாய்வுத் தளமாகவும், தொல்லியல் நிபுணர் ராஜ் சோமதேவவினால், அடையாளப்படுத்தப்பட்டு துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்ட போது, 3 மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்தை இரண்டாவது தடயவியல் அகழ்வாய்வுத் தளமாகவும் யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று பிரகடனம் செய்துள்ளது.