கூட்டமைப்பின் ஆதரவை பெறுவது எப்படி? – ரணில், சஜித், கரு ஆலோசனை
ஐக்கிய தேசிய முன்னணி நிறுத்தவுள்ள அதிபர் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவைப் பெறுவது எவ்வாறு என்பது குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அதிபர் தேர்தலில் ஐதேகவினர் அல்லாதவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
அதேவேளை, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் சந்தித்த பின்னர்- அதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.