மேலும்

பங்காளிக் கட்சிகளை சந்திக்கும் ரணில், சஜித் – பேச்சுக்கள் சுமுகம்

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பாக முடிவெடுக்க, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நேற்றிரவு சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

அலரி மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை இருவரும் சந்தித்துப் பேசிய பின்னர், ஐதேக கூட்டணியின் வேட்பாளரை தீர்மானிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐதேக தலைவர்களுக்கும், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுக்கள் எப்போது நடக்கும் என்று தீர்மானிக்கப்படவில்லை என்றும், எனினும் அடுத்த சில நாட்களுக்குள் இந்தச் சந்திப்பு நடக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

நேற்றிரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சஜித் பிரேமதாச,

“கட்சித் தலைவருடனான சந்திப்பு சாதகமான முறையில், இடம்பெற்றது. இதன் பெறுபேறு தொடர்பான நல்ல செய்தியை அடுத்த சில நாட்களுக்குள் தெரிந்து கொள்ள முடியும்.” என்று கூறினார்.

இந்தப் பேச்சுக்களில் சஜித் பிரேமதாசவுடன், அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம, கபீர் காசிம், ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும், ரணில் விக்ரமசிங்கவுடன், ராஜித சேனாரத்ன மற்றும் தினேஸ் வீரக்கொடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பேச்சுக்களில் பங்கேற்ற அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, சந்திப்பு சாதகமானமுறையில் இடம்பெற்றது என கூறினார்.

சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த இணக்கம் காணப்பட்டதா என்று அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அதுபற்றி மேலதிக கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று பதிலளித்தார்.

சில நாட்களில் சாதகமான பெறுபேறு

ஐதேகவின் அதிபர் வேட்பாளர் தொடர்பாக அடுத்த சில நாட்களில் சாதகமான நிலை ஏற்படும் என்று சஜித் ஆதரவாளரான அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் விவகாரம் தொடர்பாக அடுத்த சில நாட்களில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன், ஐதேக தலைவர்கள் பேச்சு நடத்துவார்கள்.

சிறுபான்மையினக் கட்சிகளுடனான சந்திப்புகள் வெற்றிகரமானதாக அமையும் என்று, நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிப்பு வெளியானதும் வேட்பாளர் அறிவிப்பு

தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின்னர், ஐதேகவின் செயற்குழு  அதிபர் வேட்பாளரை தெரிவு செய்யும் என்று கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

செயற்குழு விரைவில் கூடும் என்றும், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *