மேலும்

மொட்டினால் தடைப்படும் கூட்டணி – குழப்பத்தில் சுதந்திரக் கட்சி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கூட்டணி அமைப்பதற்கு, பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னமே தடையாக இருக்கிறது என்று சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

”மொட்டு அல்லது கை தவிர்ந்த வேறெந்த பொதுச் சின்னத்தையும் ஏற்றுக் கொள்வதற்கு சுதந்திரக் கட்சி தயாராக இருக்கிறது.  ஆனால் எதிர்வரும் தேர்தல்களில் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவது என்பதில் பொதுஜன பெரமுன உறுதியாக இருக்கிறது.

இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி அமைப்பது குறித்து நடத்தப்பட்ட ஏழு சுற்றுப் பேச்சுக்களும் சாதகமானதாக, பயனுள்ளதாகவே  இருந்தன.

சுதந்திரக் கட்சி கை சின்னத்தை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக பொதுஜன பெரமுன, மொட்டு சின்னத்தை கைவிட தயாராக இல்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை கவர்ந்தது மாத்திரமன்றி, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவையும், தமது கட்சியின் தலைவராக ஆக்கியிருக்கிறது பொதுஜன பெரமுன.

அவர்கள் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை, எம்முடன் கலந்துரையாடாமலேயே முடிவு செய்துள்ளனர்.

கட்சிகளுக்கிடையில் பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்த போது எஸ்.பி.திசநாயக்கவையும், டிலான் பெரேராவையும், தமது கட்சியில் சேர்த்துக் கொண்டது, இருதரப்பு பேச்சுக்களை பாதித்துள்ளது.

இந்த நிலையில், சிலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்கிறார்கள். இன்னும் சிலர் பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்கிறார்கள். இன்னும் சிலர் தனியான கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் கட்சி குழப்பத்தில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *