மேலும்

எச்சரிக்கையை அறிந்திருந்தால் தாக்குதல்களை தடுத்திருப்பேன் – மைத்திரி

பாதுகாப்புத்துறையில் உள்ள அதிகாரிகள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தாம் பெற்றிருந்த புலனாய்வு எச்சரிக்கைகள் குறித்து தனக்குத் தெரியப்படுத்தியிருந்தால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுத்திருக்க முடியும் என சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் தொடர்பாக எனக்குத் தெரியாது.

பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்த அதிகாரிகள் எனக்குத் தகவல் தெரிவித்திருந்தால், அவற்றைத் தடுக்க நான் நடவடிக்கை எடுத்திருப்பேன்.

சில அரசு அதிகாரிகளின் குறைபாடுகள் காரணமாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுக்க முடியவில்லை.

தாக்குதலைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்று என் மீது குற்றம்சாட்டப்பட்டது. உண்மை என்னவென்றால், நான் அதை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இந்த நாட்டில் உள்ள சமூகங்களிடையே உளவியல் ரீதியான ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கத் தொடங்கியுள்ளனர்.  இந்த தாக்குதலில் இறந்தவர்கள் அனைவரும் இலங்கையர்கள்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரத்தின் விளைவாக முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த தாக்குதல்களை வைத்து சிலர் நலன்களை அடைய முயற்சிக்கிறார்கள்.

சிறிலங்காவுக்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்கு அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்” என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *