மேலும்

அரசியல் தீர்வை இழுத்தடித்தால் நாடு பேரழிவை எதிர்கொள்ளும் – சம்பந்தன்  

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கம் மேலும் இழுத்தடிப்பு  செய்யுமானால், நாடு பெரும் அழிவை எதிர்கொள்ள நேரிடும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று,  புதிய அரசியலமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்தப்  பிரேரணை மோதல்களை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட வில்லை.   பல பத்தாண்டுகளாக இழுபறி நிலையிலுள்ள தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதை விரைவுபடுத்தவே இதைக் கொண்டு வந்துள்ளோம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக, அனைத்து அரசாங்கங்களின்  காலங்களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் மங்கள முனசிங்கவின் குழு நியமிக்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் காலத்தில், பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான குழு ஒன்றை அமைக்கப்பட்டது.

இத்தகைய செயற்பாடுகள் அரசியல் தீர்வுக்கான அளப்பரிய முயற்சிகளாக காணப்படுகின்றன. இந்த அறிக்கைகள் தற்போதைய அரசியலமைப்பு பேரவையின் வழிகாட்டல் குழு, நிபுணர்கள் குழுவின் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாடு சுதந்திரமடைந்து, முப்பது ஆண்டுகளின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.

அரசியல் தீர்வுக்கான பேச்சுகளுக்கு அந்த அமைப்பின் செயற்பாடுகள் தடையாக இருப்பதாக, அப்போதைய அரசாங்கங்கள் அனைத்துலக சமூகத்துக்கு தெரிவித்தன.  அதற்கிணங்க அனைத்துலக உதவியுடன் புலிகளுடனான போர்  முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

தற்போதைய நிலையில் மகிந்த ராஜபக்‌ச தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இதுவரை அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த டலஸ் அழகப்பெரும, நிமல் சிறிபால டி சில்வா போன்றோர் இந்த விடயத்தில் தமது பங்களிப்புக்களை செய்ய வேண்டியது அவசியம்.

அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் மேலும் இழுத்தடிக்கப்பட்டால் நாடு பெரும் அழிவை எதிர்கொள்ள நேரும்.

இந்த விடயத்தில்அனைத்துலக சமூகம் வெறும் பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது. தமிழ் மக்கள் மேலும் நீண்ட காலத்திற்கு பொறுத்திருக்க மாட்டார்கள்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாட்டில் எந்த முன்னேற்றமும் இடம்பெறாது. எமது தாய்நாட்டை எந்த அனைத்துலக நாடும் திரும்பிப் பார்க்க மாட்டாது.

நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம அந்தஸ்து, சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்பதையே அனைத்துலக சமவாய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அனைத்துலக பொருளாதார சமவாயத்தின் அறிக்கையும் அதனையே குறிப்பிடுகின்றது.

கனடாவின் கியூபெக் மாகாணம் தனியாக பிளவுபட இருந்தபோது அந்த நாட்டு நீதிமன்றம் சிறப்பானதொரு தீர்ப்பை வழங்கியது.

அந்த மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அங்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்றே அந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதேபோன்று எமது நாட்டிலும் அதனை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால், புதிய அரசியலமைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றாதுள்ளமை அரசு விடும் பாரிய தவறாகும்.

1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பினாலே, நாம் ஆளப்படுகின்றோம்.இந்த அரசியலமைப்பை மக்கள் நிராகரித்துள்ளனர்.

வடக்கு,கிழக்கில் பௌத்தமயமாக்கல்,  அதிகரிப்பதால் தமிழ் மக்கள் அச்சப்படுகின்றனர். அத்தகைய செயல்கள் மிகவும் சூட்சுமமான முறையில்  மேற்கொள்ளப்படுகின்றன.

உச்சகட்ட அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பிரிக்கப்படாத நாட்டில் அதிகாரப்பகிர்வு என்ற விடயம் தொடர்பில் எமது தலைவர்கள் அரசாங்கத்திடம் தொடர்ந்தும் தெளிவுபடுத்தி வருகின்றனர்.

எந்த அளவு விரைவாக அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியுமோ அந்தளவு விரைவில் அரசாங்கம் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

2 கருத்துகள் “அரசியல் தீர்வை இழுத்தடித்தால் நாடு பேரழிவை எதிர்கொள்ளும் – சம்பந்தன்  ”

  1. Arinesaratnam Gowrikanthan says:

    காலப்பொருத்தப்பாடுள்ள, வரவேற்க்கக்கூடிய அறிக்கை.

  2. Kangatharan Mithun
    Kangatharan Mithun says:

    GANAM PIRAN THIRUKKU P
    போங்கடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *