மேலும்

ஐதேகவை ஆட்சியில் வைத்திருக்க முனையவில்லை – அமெரிக்கா

சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா நிதி அளிக்கவில்லை என்றும், ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் வைத்திருப்பதற்கும் அமெரிக்கா முயற்சிக்கவில்லை என்றும் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

முகநூல் மூலம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேற்று பதிலளித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.

“சிறிலங்கா மக்களே, தற்போதைய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர், இன்னும் சில மாதங்களில் அடுத்த அரசாங்கத்தை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

மக்களின் விருப்பத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது. அடுத்து எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது.

ஒரு வலுவான, இறைமை கொண்ட, சுதந்திரமான சிறிலங்காவை அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்தோ-பசிபிக் பாதுகாப்பில் சிறிலங்காவின் பங்களிப்பையும் மதிக்கிறது.  சிறிலங்கா இந்த விடயத்தில் இன்னும் திறமையாக இருக்க உதவுவதற்காகவே, வருகை படைகள் உடன்பாடு குறித்த பேச்சுக்களில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது.

வருகை படைகள் உடன்பாடு என்பது ஒரு நிர்வாக  உடன்பாடு ஆகும். இது நுழைவு / வெளியேறும் தேவைகள், தொழில்முறை உரிமங்களை அங்கீகரித்தல் மற்றும் பெறப்பட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளை தரப்படுத்துகிறது.

தற்போது ஒவ்வொரு பயிற்சி, கப்பல் வருகை அல்லது பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிகழ்வுக்கும் முன்னர்   இந்த பிரச்சினைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

இதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது.  இந்தப் பிரச்சினைகளை எமது நாடுகள் எவ்வாறு தீர்க்க விரும்புகின்றன என்பதை முன்கூட்டியே ஒப்புக் கொள்ள முடிந்தால்,  நாங்கள் மற்ற பணிகளுக்கு அந்த நேரத்தை செலவிட முடியும்.

சீனாவுக்கும் வருகைப் படைகள் உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.  இது சிறிலங்காவுடனான நீண்டகால இருதரப்பு கூட்டு பற்றியது.

ஒரு குறிப்பிட்ட சட்டத்தை குறிப்பிட்ட சூழ்நிலைகளை கையாளுவது தொடர்பாக பல நாடுகளில் உடன்பாடுகள் உள்ளன.

உதாரணத்துக்கு, வெளிநாடுகளில் சிறிலங்கா படையினர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டபோது, அவர்கள் சிறிலங்காவுக்கே அனுப்பப்பட்டனர். சிறிலங்கா சட்டத்தின் கீழேயே விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டனர்.  இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதானவை ” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *