மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4
தெற்காசியப் பிராந்தியத்தில் மிகச்சிறிய இன அடையாளத்தை கொண்ட ஒரு அலகினால், அதீத மதவாத சிந்தனையின் பால் சார்ந்து, நன்கு திட்டமிட்ட வகையில் தனது சவால்களை எதிர் கொள்வது மட்டுமல்லாது, இதர இன அடையாளங்களை துல்லியமாக ஜனநாயகத்தின் பெயரால் பெளத்த மேலாண்மைக்குள் உள்ளாக்கக் கூடிய ஒரு தகைமையை சிறிலங்கா அரச திணைக்களங்களும், பௌத்த மதபீடங்களும் கொண்டிருக்கின்றன.
இன்று தமிழ் மக்களின்அடிப்படை தேவைகளுக்கான போராட்டங்களில் கூட பௌத்த துறவிகளும் சேர்ந்து கொள்வது பிரதிநித்துவ மேலாண்மையை தக்க வைத்து கொள்ளும் போக்கு கொண்டதுடன், இந்திய அரசியல் மாற்றத்திற்கு ஏற்ற வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் பதவி ஏற்றுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலம் மிக்க ஒரு கட்சி யில் இருந்து வந்திருப்பதுவும், அதிலும் பலர் ஈழத்தமிழர் சார்பு கொள்கை கொண்டவர்களாக இருப்பதுவும் காரணமாக தெரிகிறது.
தமிழ் மக்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான தேவைகளை அரசிடம் இருந்து பெற்று கொடுப்பதில் பௌத்த துறவிகள் சேர்ந்து கொள்வது. உள்நாட்டில் பௌத்த சிங்கள- தமிழ் உறவு வலுவடைந்து வருவதை வெளிகாட்டுவதாகவும் இதனால் இந்திய தலையீடுகள் இன நல்லுறவை சிதைக்க வல்லது என்ற ஒரு பார்வையை உருவாக்குவதாகவும் அமைய வல்லது .
ஆனால் பௌத்த துறவிகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் தலைமைத்துவ ஆளுமையற்ற தமிழினத்தை சலுகைகளால் உள்வாங்கும் போக்கு மூலம், பெளத்தத்தை பரவலடைய செய்வதுடன் அதன் இருப்பையும் உரிமையையும் தமிழ் பிரதேசங்களில் வலியுறுத்துவதாக அமைகிறது.
இந்த வகையில் மதம் பிடித்துள்ள பிராந்தியங்கள் என்ற கட்டுரையின் வரிசையில் நான்காவது பாகமாக சிறிலங்காவின் அரசியல் கள நிலவர நகர்வுப் போக்கில், மதம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என்பது குறித்த பார்க்கலாம்.
கடந்த மூன்று கட்டுரைகளிலும் பூகோள நலன்களின் அடிப்படையிலேயே நகர்த்தப்படும் சர்வதேச அரசியலின் கருவியாக மதம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து பார்க்க கூடியதாக இருந்தது. `
இதே பார்வையில் சிறிலங்காவில் இரண்டு மதங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. இந்த இரண்டு மதங்களும் பூகோள நலன்களின் அடிப்படையில் கையாளப்படுகிறது.
முதலாவதாக இலங்கைத்தீவிலே சனத்தொகையில் பெளத்தம் பெரும்பான்மை பலம் பெற்ற ஒரு மதமாக இருப்பதுவும் குறைந்த அளவில் உள்ள இதர மதங்களை தன்னிலிருந்து தரம் தாழ்ந்த நிலையில் வைத்து கொள்ளும் அதீத மதவாத போக்கு கொண்டதாகவும் உள்ளது
உதாரணமாக, அரச அதிகாரம் பெறும் எந்த தலைவர்களும் பௌத்த மத தலைவர்களை முதலில் சந்தித்து ஆசி பெறுவதுடன் பௌத்த சாசனத்தை கடைப்பிடிப்பதாக உறுதி தர வேண்டியவர்களாக உள்ளனர்.
அதே போல புதிதாக ஏதாவது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக இருந்தாலும் அல்லது யுத்த வெற்றிகள் ஈட்டினாலும் பௌத்த மத பீடாதிபதிகளிடம் அனுமதியும் ஆசியும் பெறுவது சிறிலங்கா மதவாத பண்பாட்டு தர்மமாகும்.
மேலும் இதர மதங்களை தழுவும் அரசியல் தலைவர்கள் பௌத்த மத தலைவர்களை சந்திப்பதற்கு அவர்களுடைய மத பீடங்களுக்கு வருகைதருமிடத்து அவர்கள் தரம் தாழ்த்தப்பட்டு அவமதிக்கத் தக்க வகையில் நடத்தப் படுவதை யிட்டு அந்த அரசியல் தலைவர்கள் விசனம் தெரிவித்துள்னர்.
சிங்கள சமுதாயத்திடம் ஆழ ஊடுருவி உள்ள பௌத்த மதவாதம் நாட்டின் அரசியல் நகர்வுகளை பெருமளவில் தீர்மானிக்கும் பெரும் சக்தியாக உள்ளது. இந்த பலத்தை அதன் பீடாதிபதிகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்துவதுடன் பௌத்த சிங்களத்தின் பாதுகாவலர்கள் தாமே என அனுபவித்து வருகின்றனர்.
பௌத்த மதம் தழுவாத வேறு எந்த மதபிரிவினருக்கும் தேசிய இனம் என்ற தரம் வழங்கப்படாது சிறுபான்மையினர் என்ற தரத்திலேயே வைத்து பார்க்கப்படுகின்றனர். ஆனால் இன்று அந்த சிறுபான்மையினர் கூட தமது உரிமைகளை இழந்து விட்ட நிலையை உணர்கின்றனர்.
இந்த நிலையை வெளிப்படுத்தம் வகையில் அண்மையில் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் (சிறிலங்கா) “அரசின் வலிய பாதுகாப்பு கெடுபிடிகள் அனைத்து வகையான அதீதவாதத்தையும் தான் வளர்த்தெடுக்க வல்லது. எமது பிரச்சினை என்ன வெனில் அடிப்படையில் சிறுபான்மையினர் உரிமைகள், மத அல்லது இன உரிமைகள் யாவும் அவமரியாதைக்குரிய வகையில் வலுக்கட்டாயமாக அரசாங்கத்தினால் கையாளப்படுகிறது ” என மிதவாத தமிழ் அரசியல்வாதிகளில் ஒருவரான சுமந்திரன் கூறிய தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மிதவாத தலைமை சிறிலங்கா அரசியல் கட்டமைப்பை பாதுகாத்து வந்திருந்த போதிலும் மதவாத சிந்தனைகளின் உச்ச நிலையில் சிறிலங்காவின் அரசியல் போக்கு இன்று அமைந்திருக்கிறது என்பதை மிதவாத தமிழ் தலைமைகள் கூட வெளியிட்டிருப்பது முக்கியமானது.
மதவாத நடைமுறைகளை உள்ளகத்தே கொண்டிருந்தாலும் வெளிப்பார்வைக்கு தனது மேலைத்தேய தாராள ஜனநாய நாடுகளின் அரசியல் சட்ட பண்பாடுகளை அரங்கேற்றுவதன் மூலம் சிறிலங்கா அரசு தனது பெரும்பான்மை மதவாத அரசியலை ஜனநாயகத்தின் பெயரால் பாதுகாத்து கொள்கிறது.
கொழும்பில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் சிறிலங்காவில் வாழும் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் மக்கள் சிங்கள பௌத்த மத்தினால் முற்றுகை இடப்பட்ட நிலையை அடைந்துள்ளனர் என மேலத்தேய இணயத்தளம் ஒன்று செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதேவேளை சர்வதேச அரசியல் மட்டத்தில் தாக்கம் விளைவிக்கூடிய வகையிலான, சர்வதேச அரசியல் கருத்துகளை கூறவல்ல Foreign policy சஞ்சிகை , ஏற்கனவே ஆழமான சமூக பிரிவினை மனோநிலையை கொண்டுள்ள சிறிலங்கா மேலும் அதிகரித்த பிரச்சினைகளுடன் மிக இருண்ட எதிர்காலம் ஒன்றை எதிர் கொண்டுள்ளதாக கூறி உள்ளது.
எல்லோரும் எண்ணுவது போல் புத்த மதத்தை சமாதான மதமாக பார்ப்பது போல் அல்லாது, சிறிலங்கா, பர்மா போன்ற நாடுகளில் நிலைமை சிக்கலானது என்ற Foreign policy இன் பார்வை, சிறிலங்கா பௌத்த பீடங்களை விழிப்படைய செய்துள்ளது என்பது கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் சார்ந்து பௌத்த துறவிகள் நடத்தும் போராட்டங்களில் இருந்து தெரிய வருகிறது.
தற்போதைய நிலையில் சிறிலங்காவில் இரண்டு மதங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. இந்த இரண்டு மதங்களும் பூகோள வல்லரசுகளினதும் பிராந்திய வல்லரசுகளினதும் நலன்களின் அடிப்படையில் கையாளப்படுகிறது. என்பது இங்கே எடுத்துக்காட்டப்பட உள்ளது
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் குறித்து பல்வேறு ஆய்வாளர்களும் தமது கருத்துகளை கூறியுள்ளனர். எல்லோரும் குறிப்பாக உண்மையில் யார் காரணம் , சர்வதேச பயங்கர வாத அமைப்பான ஐஎஸ் ஐஎஸ் அமைப்பின் பின்புலம், சிறிலங்கா அரசியல் தலைவர்களின் கருத்துகள், சிறிலங்காவில் .இஸ்லாமிய அடிப்படை வாதம் என பல்வேறு கோணங்களிலும் ஏற்கனவே ஆய்வுகளை பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் கூறிவிட்டனர்.
ஆனால் இந்த குண்டு வெடிப்பு களுக்கு என்ன தேவை இருக்கிறது என்பதையும் அதன் மூலம் பயன் அடைந்தவர்கள் குறித்தும் பெரிய அளவில் ஆய்வாளர்கள் கரிசனை கொண்டதாக தெரியவில்லை. சர்வதேச நகர்வுகளுக்கான தேவை , இந்திய அரசியல் தேவை , சிறிலங்காவில் உள்நாட்டு தேவை என இங்கே மூன்று வகையாக பிரித்து கையாள வேண்டியதாக உள்ளது.
சர்வதேச தேவை
இலங்கையின் பூகோள முக்கியத்துவமும் ஈரான் மீதான அமெரிக்க நடவடிக்கைகள் குறித்தும் ஏற்கனவே இந்த கட்டுரை தொகுதிகளில் கண்டிருக்கிறோம். ஆனால் சிறிலங்காவின் சீன சார்பு போக்கும் சீனாவுக்கான தள வசதிகள் நிரந்தரமாக்கப்பட்ட நிலையும் , உதாரணமாக அம்பாந்தோட்டை துறைமுகத்தினை 99 வருட குத்தகை ஒப்பந்த கைச்சாத்து ஆகியன அமெரிக்க உயர்மட்ட காங்கிரஸில் தெற்காசிய பிராந்திய கண்காணிக்கும் செனட்டர்களை மிகவும் கவலை அடைய செய்திருப்பது குறித்து செய்திகள் 2018 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக அனைத்து முன்னணி அமெரிக்க பத்திரிகைகளிலும் பிரசுரமாகி இருக்கிறது எனலாம்.
இது தவிர தற்போதைய அமெரிக்க நிர்வாகம் எந்த பிராந்தியத்திலும் நிரந்தர படைத்தளங்களை அமைத்து கொள்வதில்லை என்ற கொள்கையை கொண்டிருப்பதுடன். இராணுவ பாதுகாப்பு ஆய்வாளர்கள் சிலரின் பார்வையில் நிரந்தர படைத்தளங்கள், உள்ளுர் தேசியவாதிகளின் எதிர்ப்பை தேடி கொள்வதை தவிர இன்றைய பல யுத்த கப்பல்களின் வசதிகளுடன் ஒப்பிடும் இடத்து பெரிதாக எந்தவித சலுகைகளையும் தருவதாக இல்லை என்ற பார்வையை கொண்டுள்ளனர்.
ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரையில் அதன் பூகோள நிலையம் அதீத முக்கியத்துவம் பெறுவதால் அதனை திருத்தி எடுப்பதை தவிர வேறு வழியில்லை. அதாவது எப்பொழுதும் மேலைத்தேயத்திற்கு சாதகமான அரசை ஆட்சியில் வைத்திருக்க வேண்டிய தேவை சிறிலங்காவில் இருக்கிறது.
இதனால் நாட்டில் நிரந்தர அரசியல் கட்டமைப்பு ஒன்று இல்லாத வகையில், செய்வதன் மூலம் சிறிலங்காவில் மேலைத்தேய பூகோள நலன்களை கரிசனையில் கொண்டு நடக்காத எந்த அரசாங்கத்தையும் மிரட்டலில் வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது.
இதுவரையில் குண்டு தாக்குதல் நடத்தியவர்கள் பல ஆய்வாளர்களால் முகவர் யுத்ததாரிகளாகவே பார்க்கப்படுகின்றனர். ஏனெனில் இலங்கைத்தீவின் ஒன்பது இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களும் ஒன்பது தாக்குதல்தாரிகளும் மிகச்சிறிய ஒரு குழுவினை சார்ந்தவராக இருந்தபோதிலும், மிக கச்சிதமான இராணுவ பெறுமதிமிக்க வெடி பொருட்களுடன் எவ்வாறு நடத்த முடிந்தது என்பது பலரதும் கவனமாக உள்ளது .
சிறிலங்கா பத்திரிகைகள் சில மேலைத்தேய நாடுகளின் எதிரிகளான ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினர் தம்மை தாக்கினர், தாமும் மேலைத்தேயத்துடன் இணைவாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்ற வகையில் பெருமை கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த குண்டு தாக்குதல்களில் மேலைத்தேய நாடுகளின் உளவு நிறுவனங்களின் சதி சந்தேகத்திற்கு உரிய வகையில் இருப்பதை ஒரு சாரார் குறிப்பிட்டு வருகின்றனர்.
சிறிலங்காவின் சீன சார்பு கொள்கை குறித்தும் அதன் கப்பற்தள வசதிகள் உட்பட பல்வேறு முதலீடுகளிலும் சீனாவின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டும் இந்த ஆய்வாளர்கள், இவ்வாறு அமெரிக்க சார்பு நாடுகளாக இருந்த பூகோள முக்கியத்துவம் மிகுந்த நாடுகள் பின்பு சீன சார்பு கொள்கைகளுக்கு மாறியதன் பின்பு, இஸ்லாமிய தீவிரவாத நெருக்கடிகளை அல்லது உள்ளுர் அரசியல் நெருக்கடிகளை சந்தித்த தன்மையை உதாரணமாக காட்டுகின்றனர்.
குறிப்பாக, பிலிப்பைன்ஸ் தலைவர் 2017 ஆம் ஆண்டிற்கு முன்னர் தனது பிராந்திய வல்லரசான சீனாவுடன் இணைந்து போகக்கூடிய வகையில், சீன சார்பு கொள்கைக்கு மாற்றம் கண்டிருந்தார். இந்த மாற்றத்தால் அமெரிக்க இராணுவ இருப்பு பிலிப்பைன்சிலே கேள்விக்குறியாகியது. நீண்ட கால அமெரிக்க நிலை தளர்வடையும் போக்கு தென்பட்டது.
ஆனால் 2017 ஆம் ஆண்டு பிலிப்பைன்சின் தீவுகளில் ஒன்றான மின்டானோவில் உள்ள மறாவி என்ற நகரில் ஐஎஸ் தீவிர வாத தாக்குதல்கள் அங்கு திடீரென ஆரம்பித்ததை தொடர்ந்து மீண்டும் அமெரிக்க சார்பு கொள்கைக்கு தன்னை மாற்றி கொண்டார்
அதேபோல மலேசிய முன்னைநாள் பிரதமர் நஜீப் ரசாக் அவர்களும் 2009 ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததிலிருந்து சீன சார்பு போக்கை கடைப்பிடித்தது மட்டுமல்லாது, சீனாவின் ஒரு சூழல் ஒரு பாதை திட்டத்தில் மிக ஆர்வமாக இணைந்து செயற்பட்டதுடன், பல்வேறு சீன முதலீடு களிலும் ஊழல்களிலும் தொடர்புடையவராக இருந்தார். இதனை மையமாக வைத்து அமெரிக்க பத்திரிகைகள் முன்நின்று அவரது ஊழல் விவகாரங்களை சர்வதேச அளவில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன.
இதன் மூலம் ரசாக் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். பதிலாக பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு வாழ்க்கை வாழ்ந்து வந்த முன்னைநாள் பிரதமர் மகதீர் முகமது மீண்டும் பதவியில் ஏற்றப்பட்டார். ரசாக்கின் காலப்பகுதியிலே மலேசிய விமானம் மர்மமான முறையில் காணாமல் போனதுவும் இன்னும் ஒர் விமானம் உக்ரேன் கிழக்கு பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதிலே பிலிப்பைன்ஸ் அரசியல் கொள்கை இஸ்லாமிய முகவர் தாக்குதலாலும் மலேசிய தலைமை ஊழல் காரணமாகவும் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் ஊடாகவும் மாற்றப்பட்டனர்.
இதேபோல மியான்மரில் ரொகின்யா மக்கள் மத்தியில் இருந்த சிறு குழு ஒன்றின் ஊடாக சீன முதலீட்டு பிராந்தியங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதும், 2015 ஆம் ஆண்டு சிறி லங்காவில் ராஜபக்ச ஆட்சி பதவியை இழந்த விவகாரம், மாலைதீவில் சதிப்புரட்சிகள் இடம் பெற்றமை, இம்ரான்கான் மேற்கத்தேய கடன்உதவிகளை கட்டுப்படுத்தும் கொள்கையை அறிவித்ததும், தெற்கு பாகிஸ்தானிய குண்டு வெடிப்புகள் என பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.
சந்தேகத்திற்கு இடமான வகையிலும் சர்ச்சைக்குரிய வகையிலும் மேற்குலக முகவர்களாலும், உளவு நிறுவனங்களாலும் தெற்காசியாவில் நடத்தப்பட்ட பல குண்டு வெடிப்பு, சதி புரட்சி ஆதாரங்கள் குறிப்பிடக் கூடியனவாகும்.
ஆக ஏற்கனவே கூறியது போல சிறிலங்காவில் இடம் பெற்ற குண்டு வெடிப்புகளும் இத்தகைதொரு சந்தேகத்தையே கிளப்புகிறது என்பது, சந்தேக கண் கொண்ட ஆய்வாளர்கள் பார்வையாகும் .
இந்தியாவின் தேவை
புல்வாமா தாக்குதல்களும் அதனை தொடர்ந்து இடம் பெற்ற விமான தாக்குதல்களினாலும் வடஇந்தியாவில் இந்திய பிரதமர் ”இந்தியாவின் பாதுகாவலன்” என்ற பெயர் எடுத்திருந்தது குறித்தும் இந்த கட்டுரைகளில் ஏற்கனவே கண்டிருந்தோம்.
வட இந்தியாவில் இந்து அடிப்படைவாதத்தை மையமாக கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்த இந்திய பிரதமர் மோடிக்கும் அவரது பாரதீய ஜனதா கட்சிக்கும் தெற்கிலிருந்தும் இஸ்லாமிய ஆபத்து இருக்கிறது என்று காட்டும் தேவை ஏற்பட்டது.
தேர்தல் பிரச்சாரங்களில் சிறிலங்கா குண்டு வெடிப்பு மிகப்பெரும் தாக்கத்தை விளைவித்து இருக்கிறது. இதனை தேர்தல் காலப்பகுதி பிரச்சார மேடைகளில் பாஜக தலைவர் அமித் ஷாவும், இதர தலைவர்களும் நடத்திய பேச்சுகள் சான்றாக அமைகின்றன. மோடியினால் மட்டுமே தெற்காசியாவை பாதுகாக்க முடியும். அவருடைய நவ யதார்த்தவாத போக்கு ஒன்று மட்டுமே பிராந்திய பாதுகாப்பு சமநிலையை பேணவல்லது என்பது பாஜக வின் பேச்சுப்பொருளாக இருந்தது.
மோடி பாதுகாப்பையும், வெளியுறவையும் மையமாக கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளும் பாதுகாப்பான வளர்ச்சி மிக்க அரசியல் நடத்தி வந்தார். ஆனால் தற்பொழுது தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்து வருகிறது என்பதை வெளிப்படுத்தப் பட்ட போது , அனுபவங்கள் அற்ற அரசியல் எதிராளி, சமூக பிரச்சனைகளிலும் மாநில கட்சிகளின் கூட்டு பலத்திலும் தங்கி இருந்த ராகுல் காந்தி மிகச் சிறியவராக ஆகி விட்டார்.
இதனால் மோடியின் இந்து அடிப்படைவாத தேர்தல் பிரசாரத்திற்கு இஸ்லாமிய எதிரி தெற்கிலும் இருக்கிறது என்ற மனஇயல் தாக்கம் இந்திய வாக்காளர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது. பாதுகாப்பு நிலைமை ஒன்றை நாடியே மக்கள் முன்னேற வேண்டும் என்பதன் பலனாக மோடி மீண்டும் பிரதமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவரது 2.0 என்று குறிப்பிடக் கூடிய சர்வதேசத்திற்கு உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய முதலாளித்துவ பார்வைகொண்ட இந்துத்துவ முன்னிலைவாத அரசியலின் தொடர்ச்சி மேலும் தரம் உயர்த்தப்பட்ட வகையில் செயற்பட்டு வருகிறது.
-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி
(சிறிலங்காவின் தேவை அடுத்த வாரம் வரும்)