மேலும்

சுமார் 4 மணி நேரம் வரையே சிறிலங்காவில் தங்குவார் மோடி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில மணித்தியாலங்களே இங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைதீவில் இருந்து நாளை மறுநாள் முற்பகல் சுமார் 11 மணியளவில் இந்தியப் பிரதமர் மோடி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ளார்.

அங்கிருந்து அவர், அதிவேக நெடுஞ்சாலை வழியாக, கொழும்பு வரவுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தியப் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படும்.

அதனையடுத்து, இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

இருதரப்பு பேச்சுக்களை அடுத்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரையும், இந்தியப் பிரதமர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்தப் பேச்சுக்களை முடித்துக் கொண்டு, 3 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்துக்குப் புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரையே அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் புறப்பட்டு, ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு நாளை மாலை 4.30 மணியளவில் இந்தியப் பிரதமர் சென்றடைவார்.

அங்கிருந்து, பிற்பகல் 5 மணியளவில் திருப்பதிக்கு புறப்படும், இந்தியப் பிரதமர், நாளை மாலை 6 மணியளவில், திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

அதேவேளை, இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயண நிகழ்ச்சி நிரல் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *