மேலும்

சிறிலங்கா அதிபர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பூஜித ஜயசுந்தர

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் சாட்சியம் அளித்த – கட்டாய விடுமுறையில் உள்ள சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, சிறிலங்கா அதிபர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த விசாரணையின் போது, அவர் பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

அந்த விசாரணையில் தெரிவுக்குழு உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளும், அதற்கு, காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அளித்திருந்த பதில்களும் முழுமையாக தரப்பட்டுள்ளன.

ஜயம்பதி விக்ரமரத்ன – ஜெயசுந்தர உங்களைப் பற்றி கூறுங்கள்?

நான் 1985இல், உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பணியில் இணைந்தேன்.  என்னுடன் மேலும் இருவர், ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். பயிற்சிகளுக்குப் பின்னர், 194இல், காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டேன். 1996இல்,  மூத்த காவல்துறை கண்காணிப்பாளராகவும், 2005இல், பிரதி காவல்துறை மா அதிபராகவும், பதவி உயர்த்தப்பட்டேன். 2016 ஏப்ரல், 20ஆம் நாள் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டேன்.

ஜயம்பதி விக்ரமரத்ன – உங்களிடம் நேரடியாக இருக்கக் கூடிய பிரிவுகள் உள்ளனவா?

ஆம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் எனக்குக் கீழ் தான் இருந்தார். தேவை எழுந்த போது, தீவிரவாத விசாரணைப்பிரிவை எனது கண்காணிப்பில் எடுத்துக் கொண்டேன். அப்போது, நாலக சில்வா அதற்குப் பொறுப்பாக இருந்தார். நாள் நினைவில் இல்லை, 2017 ஆக இருக்கலாம்.

ஜயம்பதி விக்ரமரத்ன – எங்களுக்கு ஒரு வரைபடம் அனுப்புங்கள்.

நீங்கள் கேட்டால், பதில் காவல்துறைமா அதிபர் அதனை செய்ய முடியும். இப்போது அதனைச் செய்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை.

ஜயம்பதி விக்ரமரத்ன – அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் உங்களுக்கு அறிக்கையிடுவாரா?

இல்லை. முதலில் காவல்துறை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தது. தீவிரவாதத்தின் காரணமாக, முப்படைகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருந்ததால் அதற்கான தேவை இருந்தது. பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சு உருவாக்கப்பட்டது. அதன் கீழ் காவல்துறை கொண்டு வரப்பட்டது.

ஜயம்பதி விக்ரமரத்ன – காவல்துறை இன்னொரு அமைச்சின் கீழ் தான் இருக்க வேண்டும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கக் கூடாது என்பது விதிமுறையா?

ஆம். பின்னர், காவல்துறையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. அரச புலனாய்வுச் சேவையின் அதிகாரிகளை காவல்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழேயே இருக்கின்றனர்.

சரத் பொன்சேகா – அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் யாருக்கு அறிக்கைகளை சமர்ப்பிப்பார்?

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு.

சுமந்திரன் – அரச புலனாய்வுச் சேவை அதிகாரிகள் காவல்துறையை சேர்ந்தவர்களாக இருந்த போதும், இன்னொரு அமைச்சின் கீழ் இருந்ததாக கூறுகிறீர்கள்.

அது ஒரு வகையான அமைப்பாக இருந்தது.

சுமந்திரன் – அங்கு முறையான அமைப்பு இருந்ததா?

எனக்குத் தெரியாது.

சரத் பொன்சேகா- வேறு அமைச்சின் கீழ் இருந்தால் சரியான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிக்கல்களை கொண்டிருக்கும் எனக் கூறுகின்றீர்களா?

அப்படியே இருந்தது. எப்போது தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஏதாவது முக்கியமான விடயம் இருந்தால் அதனைப் என்னுடன் பகிர்ந்து கொள்வார். தேவையான அவசியம் இருந்தால் மாத்திரமே அப்படியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

ஏதாவது தகவல்களை நாம் அவர்களுக்கு அனுப்ப முடியாது. ஆட்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற விடயங்களை நிர்வாக ரீதியாக செய்துகொள்ள முடியும். எனினும் அங்குள்ள நிலைமைகளைக் கண்காணிக்க காவல்துறைமா அதிபருக்கு அதிகாரம் கிடையாது. நான் அதன் தலைமையகத்துக்குப் போனது கூடக் கிடையாது. அங்கு செல்வதற்கு முயற்சிகள் எடுத்த போதும் அவை பலனளித்திருக்கவில்லை.

ஜயம்பதி விக்ரமரத்ன – நீங்கள் இன்னொரு அமைச்சின் கீழ் இருந்த போதும், பாதுகாப்பு செயலருக்கு அறிக்கையிடும், காலம் எப்போது ஆரம்பமானது?

அது எனக்கு சரியாக நினைவில் இல்லை. எனது பணியின் ஆரம்ப காலத்தில் இருந்தே அவ்வாறு தான் இருந்தது.

சரத் பொன்சேகா –அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் எந்தவொரு தகவலைப் பெற்றாலும், பாதுகாப்புச் செயலருக்காக அறிக்கையிட வேண்டுமா?

ஆம்.

ஜயம்பதி விக்ரமரத்ன – நீங்கள் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரா?

ஆம்.

ஜயம்பதி விக்ரமரத்னதேசிய பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு  யார் அழைப்பை விடுப்பது?

காவல்துறை மா அதிபர் – பாதுகாப்புச் செயலர் தான், தெரியப்படுத்துவார்.

ஜயம்பதி விக்ரமரத்ன – நீங்கள் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர் எல்லா பாதுகாப்புச் சபை கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறீர்களா?

2016 ஏப்ரல் 20ஆம்நாளுக்குப் பின்னர் நான் தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களில் பங்கெடுத்திருந்தேன். எனினும், 2018 ஒக்டோபர் 23ஆம் நாளுக்குப் பின்னர் எந்தவொரு பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. நான் அதில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என எனக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

ஜயம்பதி விக்ரமரத்ன – யார் அதனைக் கூறியது?

அப்போதிருந்த பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவே வாய்மொழியாகத் தான் அதனைக் கூறினார். 2018 ஒக்டோபர் 23ஆம் நாளுக்குப் பின்னர் ஒருநாள் பாதுகாப்புச் சபைக் கூட்டம் பற்றி அறிந்திருந்தேன். பிற்பகல் 4.30 மணியாகியும் எனக்கு அழைப்பு வரவில்லை. நான் பாதுகாப்புச் செயலரிடம் கேட்டேன்.

“உங்களை சங்கடப்படுத்துவதற்கு மன்னிக்க வேண்டும், சிறிலங்கா அதிபர் உங்களை அழைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்” என அவர் எனக்குப் பதில் வழங்கினார். அப்படியாயின் எனது சார்பில் யாரையாவது அனுப்பவா எனக் கேட்டேன், தேவையில்லை என்று பதிலளித்தார்.

ராஜித சேனாரத்ன – காவல்துறை மாஅதிபர், பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் அல்லவா?

ஆம்.

ராஜித சேனாரத்ன – அத்தகைய ஒரு முக்கியமான உறுப்பினர் எப்படி விலகி இருக்க முடியும், யாராவது உங்களிடம் கலந்து கொள்ளக்கூடாது என்று சொன்னால், நீங்கள் எப்படி ஒதுங்கியிருக்க முடியும்?

அதனைக் கூறியவர் யாரோ ஒருவர் அல்ல, எமது பாதுகாப்புச் செயலர். அவரிடம் நான் எப்படி காரணம் கேட்க முடியும்.

சரத் பொன்சேகா –அதன் பின்னர், பாதுகாப்புச் சபைக் கூட்டங்களில் நீங்கள் பங்கேற்கவில்லையா?

குண்டுவெடிப்புகள் நடைபெற்ற பின்னர் ஏப்ரல் 23ஆம் நாள் அழைத்திருந்தார்கள்.

ஜயம்பதி விக்ரமரத்னஉங்களை பாதுகாப்பு சபைக்கு  அழைக்காமைக்கு காரணம் ஏதாவது இருப்பதாக நம்புகின்றீர்களா?

என் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கலாம் என்று நினைத்தேன்.

ஆஷூ மாரசிங்க- ஒக்டோபர் 23ஆம் நாள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் என்ன விடயங்கள் பேசப்பட்டன?

அன்று அதிகாரி ஒருவரின் இடமாற்றம் தொடர்பாக  பேசுவதற்காக அந்தக் கூட்டம் கூட்டப்பட்டமையால் இறுதியில் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோது நான் கருத்துக்களை முன்வைத்திருந்தேன்.

சுமந்திரன் – அந்த இடமாற்றம் தொடர்பான விவகாரத்தினால், நீங்கள் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

எனக்குத் தெரியாது.

சுமந்திரன் – இடமாற்ற விவகாரம், காவல்துறை ஆய்வாளர் நிசாந்த சில்வாவுடன் தொடர்புடையதா?

ஆம். அவர் சிறந்த அனுபவம் உள்ள அதிகாரி. ஆட்கடத்தல்கள் தொடர்பான வழக்குகளை அவர் விசாரித்துக் கொண்டிருந்தார். அந்த ஆட்கடத்தல் சம்பவத்துடன் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சம்பந்தப்பட்டிருப்பதால், குறித்த காவல்துறை  அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. பின்னர் நானே அந்த இடமாற்றத்தையும் இரத்துச் செய்தேன்.

சுமந்திரன்எங்கிருந்த அந்த அழுத்தம் வந்தது?

சிறிலங்கா அதிபரிடம் இருந்தே  அழுத்தம் வந்தது. சிறிலங்கா அதிபர் கூறியதாக பாதுகாப்பு செயலர் கூறினார்.

ராஜித சேனாரத்ன – இதற்கு சிறிலங்கா அதிபர் காரணம் எதையும் கூறினார்?

இல்லை.  விசாரணையின் போக்கு காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

நளிந்த ஜயதிஸ்ஸதவ்ஹீத் ஜமாத் அமைப்பை தடைசெய்வதற்கு பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வா அறிக்கையிட்டிருந்தாரா?

ஆம். இது தொடர்பாக பல விடயங்கள் பகிரங்கமாகக் கூறப்பட வேண்டியுள்ளது. அனர்த்தம் இடம்பெற்ற பின்னர் காவல்துறை மா  அதிபரின் தவறினால்தான் முழு சம்பவமும் இடம்பெற்றது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நான் எந்த விடயத்தையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை.

ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையில் முதல் தடவையாக ஊடகங்களுடன் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டஅனைத்து கத்தோலிக்க குடும்பங்களுக்கும் கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஏப்ரல் 9ஆம் நாள், தாக்குதல்கள் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களை நான் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தேன்.  ஏப்ரல் 4ஆம் நாள், புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததா என்பது பற்றி எனக்குத் தெரியாது. புலனாய்வு விடயங்களை ஆராயும் வாராந்த கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. அங்கு எந்த விடயமும் கலந்துரையாடப்படவில்லை.

ரவூப் ஹக்கீம் –  இதற்கு வெளியில் எங்காவது இது பேசப்பட்டுள்ளதா?

எனக்கு அதுபற்றித் தெரியாது. ஏப்ரல் 9ஆம் நாள்  எனக்கு தேசிய புலனாய்வுப் பணிப்பாளரிடமிருந்து முதலில் அறிக்கை ஒன்று வந்தது. அதில் இந்திய தூதரகம்,  கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்று அரசாங்க புலனாய்வு சேவை பணிப்பாளரிடமிருந்து அனுப்பப்பட்ட மற்றுமொரு அறிக்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் பற்றியோ, இந்திய தூதரகம் பற்றியே எதுவும் குறிப்பிடப்படவில்லை.  உறுதிப்படுத்தப்படாத தகவல் எனவும், மிகவும் இரகசியமானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனது பார்வைக்காக அனுப்பப்பட்ட அந்த அறிக்கைகள் குறித்து நான் காவல்துறை  அதிகாரிகளை விழிப்புணர்வூட்டத் தீர்மானித்தேன். இதற்கமைய நான்கு அதிகாரிகளைத் தெரிவு செய்தேன். எனினும், இரண்டு பிரதான புலனாய்வு பிரிவுகளின் அறிக்கைகளிலும்  முரண்பாடான விடயங்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

அதேநேரம், 2018ஆம் ஆண்டு அல்குவைடாவுடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட போது அது பற்றி அரசாங்க புலனாய்வு சேவை மேற்கொள்வதால் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் விசாரணைகளை நிறுத்துமாறு எமக்குப் பணிக்கப்பட்டது. இதனால் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன. அடிப்படைவாத அமைப்புக்கள் பற்றிய விசாரணைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாக இருந்திருக்கும்.

ஆஷு மாரசிங்கபுலனாய்வு குறித்து ஆராயும் கூட்டத்தில் நிகழ்ச்சி நிரல் உள்ளதா?

குறிப்பாக இந்தக் கூட்டத்துக்கு பாதுகாப்புச் செயலர் தலைமை தாங்குவார். அதில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் விளக்கமளிப்பார். ஏப்ரல் 9ஆம் நாள்  நடைபெற்ற கூட்டத்தில் இதுபற்றி எந்த விடயமும் கலந்துரையாடப்படவில்லை.

ஏப்ரல் 9ஆம் நாள்  அறிக்கையின் பின்னர்,  ஏப்ரல் 18ஆம் நாள்  கிடைத்த கடிதத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசாங்க புலனாய்வுப் பிரிவின் தலைவரினால் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் காத்தான்குடி பிரதேசத்தில் உந்துருளி வெடிக்கவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் பின்னர் 19ஆம் நாள்  அனுப்பப்பட்ட அறிக்கையில் சஹ்ரானுக்கு நெருக்கமான ஒருவரால் உந்துருளி வெடிக்க வைக்கப்பட்டது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நேரடியான எந்தத் தகவல்களும் குறிப்பிடப்படவில்லை. சஹ்ரானின் பெயர் இந்தக் கடிதத்தில் இருந்தாலும், ஏற்கனவே கூறப்பட்ட புலனாய்வுத் தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கவில்லை.

ஏப்ரல் 20ஆம் நாள்  அறிக்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தொடர்பில் தகவல்கள் உள்ளன. இறுதியில் சஹ்ரான் உள்ளிட்ட வலையமைப்புத் தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9ஆம் நாள்  தகவல் கிடைத்தும் 21ஆம் நாள் வரை புலனாய்வுப் பிரிவினர் எவ்வாறான திட்டத்தையும் வகுத்திருக்கவில்லை.

சுமந்திரன்இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உங்களுக்கு அங்குள்ள காவல்  நிலையத்திலிருந்து அறிக்கை கிடைக்கவில்லையா?

சாதாரணமாக ஏதாவது ஒரு காவல் நிலையத்துக்குப் பொறுப்பான இடத்துக்குள் ஏதாவது ஒரு சம்பவம் இடம்பெற்றால் அது பற்றி அறிக்கையொன்றை எமக்கு அனுப்ப வேண்டும்.

நளிந்த ஜயதிஸ்ஸகடிதப் பரிமாற்றங்களுக்கு அப்பால் புலனாய்வுத் தகவல் எப்போது கிடைத்தது எனத் தெரியுமா?

எனக்குத் தெரியாது, எனினும், ஊடகங்களில் வெவ்வேறு தகவல்கள் உள்ளன.

நளிந்த ஜயதிஸ்ஸநீங்கள் அறிவித்தவர்களில் அதிபர் பாதுகாப்புப் பிரிவும் உள்ளடக்கப்பட்டுள்ளதா?

ஆம்.  நான் ஏற்கனவே கூறியதைப் போன்று சிறப்பு அதிரடிப்படைக்குப் பொறுப்பான மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லதீப் அதிபர் மற்றும் பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கு மேலதிக பொறுப்பில் இருக்கின்றார்.

எனினும் எந்தவொரு நபருக்கும் நாம் கிடைக்கும் புலனாய்வுத் தகவல்களையும் தெரியப்படுத்துவதில்லை. பிரமுகர்கள் பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரிக்கு அனுப்பும்போது குறித்த பிரமுகருக்கு அறிவிப்பதா இல்லையா என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்.

காவல்துறை மா அதிபர்  எந்தவொரு விடயத்தையும்சிறிலங்கா அதிபருக்கு நேரடியாக தெரியப்படுத்த வேண்டும் என்ற நடைமுறை எதுவும் இல்லை. புலனாய்வுத் தகவல்கள் அரசாங்க புலனாய்வு சேவைகள் பணிப்பாளர் ஊடாக சிறிலங்கா அதிபருக்கு நேரடியாக அனுப்பப்படும்.

ஏப்ரல் 20ஆம் நாள்  மாலை  எனக்கு இரண்டு அழைப்புக்கள் வந்தன. எனது ஞாபகத்துக்கு அமைய மாலை 6.30க்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரம்.

முதலில் அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் அழைப்பில் இருந்தார். நாளை, ஆபத்து எதுவும் நடக்கலாம் எனக் கூறித் தொடர்பைத் துண்டித்தார்.

அதன் பின்னர் பாதுகாப்புச் செயலர் அழைப்பில் வந்து, நிலந்த ஜெயவீர அழைப்பை ஏற்படுத்தினாரா எனக் கேட்டார். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரேயடியாக எப்படியான அச்சுறுத்தல் ஏற்பட்டது. அப்போது நான் வீட்டில் இருந்தேன்.

உடனடியாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கு, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான மூத்த பிரதி காவல்துறை மா  அதிபர்களுக்கு தகவலைத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறினேன்.

மறுநாள் காலை 7.15 மணியளவில் மீண்டும் அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் அழைப்பை ஏற்படுத்தி இன்று எதுவும் நடக்கலாம் எனக் கூறினார். என்னால் முடிந்தளவு, அனைத்து நடவடிக்கையையும் எடுத்திருந்தேன். எனினும் மேல் மட்டத்திலிருந்து எனக்கு எந்தக் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை. காவல்துறையினருக்கு மாத்திரம் பொறுப்பு அல்ல. சகலருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது.

சுமந்திரன் – உயர்மட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்பது சரி. ஏப்ரல் 18, 19 மற்றும் 20ஆம் நாள்களில் தொடர்ச்சியாக இவ்விடயம் கவனத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பற்றி பாதுகாப்புச் செயலருக்கு அறிவிக்கப்பட்டதா என அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளரிடம் நீங்கள் கேட்டீர்களா?

காவல்துறை மா அதிபர் – நான் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. நடைமுறையில் ஒருங்கிணைப்பது தேசிய புலனாய்வு பணியகத்துடன் தொடர்புபட்டிருப்பார் என்பதால் அவர்கள் அறிந்திருப்பார்கள். எனக்கு முடிந்ததைச் செய்தேன்.

ஆஷு மாரசிங்க – 2018 ஓகஸ்ட் 23ஆம் நாளுக்கு முன்னர் காவல்துறை  சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனான தொடர்புகள் எப்படி இருந்தன?

காவல்துறை மா அதிபர் – சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இருக்கும்போது சில விடயங்களை செய்ய முடிந்தது. சம்பந்தப்பட்ட அமைச்சருடன் நேரடியாகக் கதைத்து பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்தது. எனினும், பின்னர் நிலைமைகள் மாறியதும் குறிப்பாக உள்ளூராட்சி சபை தேர்தல்களின் பின்னர் செயற்பாடுகள் கடினமானது. அதன் பின்னர் பல விடயங்களில் காலம் தாழ்த்தும் நிலைமையே ஏற்பட்டது. கவலைக்குரிய விடயங்கள் இருக்கின்றன.

ரவூப் ஹக்கீம்குற்றப் பலனாய்வுப் பிரிவினர் மாவனல்ல சம்பவத்தின் பின்னர் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் புலனாய்வுத் தகவல்கள் பரிமாறப்பட்டனவா?

குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குத் தேவையாயின் உதவியைப் பொலிஸார் வழங்குவர். எனினும் அவர்கள் தமக்கே உரிய பாணியில் விசாரணைகளைத் தொடர்வார்கள்.

சுமந்திரன்-  குண்டுத் தாக்குதல்களின் பின்னர் உங்களை பதவி விலகுமாறு யாராவது கோரினார்களா?

ஆம்

சுமந்திரன் – யார் பதவி விலகக் கோரியது?

சிறிலங்கா அதிபர்.  ஏப்ரல் 23ஆம் நாள்  இரவு எட்டு மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு கூறினார். உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த நான் அவரைச் சந்திக்கச் சென்றேன். நடந்த சம்பவத்துக்கு முழுமையான பொறுப்பு என்னுடையது, உரிய முறையில் தனக்குத் தெரியப்படுத்தவில்லை என்றார்.

காவல்துறை மா  அதிபர் என்ற ரீதியில் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். பாதுகாப்புச் சபையிலும் மௌனமாக இருந்தீர்கள். எனவே நீங்களே பொறுப்புக் கூற வேண்டும். விசாரணைக் குழுவொன்றை அமைக்கப் போகின்றேன். அதில் தவறிழைத்தவர்கள் நீங்கள் என்றே தெரியவரும். ஓய்வூதியம் இன்றி வீடு செல்லப் போகின்றீர்களா? தவறை ஏற்றுக் கொண்டு பதவி விலகுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

தேசிய புலனாய்வுப் பிரிவு அறிக்கை தொடர்பில் நான் முன்னர் அனுப்பியிருந்த பதில் கடிதத்தை காண்பித்தேன். அதனைப் பார்த்து விட்டு எதுவும் பேசவில்லை. கடந்த 34, 35 வருடங்களாக காவல்துறை  சேவையில் இருக்கின்றேன். எப்போதும் காவல்துறையைப் பற்றி சிந்திக்கும் ஒருவன். திருட்டு,பொய் செய்யவில்லை.

சிறுசிறு விமர்சனங்களைத் தவிர எந்த குற்றச்சாட்டுக்களும் என்மீது இல்லை. சேவையிலிருந்து செல்லும்போது ஓய்வூதியம் இன்றி சென்றால் பிள்ளைகளுக்கு என்ன கூறுவது? எனக்கு சொந்தமாக இருக்க ஒரு இடம்கூட இல்லை. ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டேன். 8.45 மணியளவில் நான் சென்று விட்டேன்.

அதன் பின்னர், ஏப்ரல் 25ஆம் நாள்  தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிறிலங்கா அதிபர், கேட்ட கடிதத்தை இன்னும் தரவில்லை  என  கூறியதுடன், ஏதோ கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை கடுமையாக ஏசினார்.

நான் எதுவும் பேசவில்லை. மௌனமாக இருந்தேன். ஏப்ரல் 29ஆம் நாள்  கட்டாய விடுமுறைக் கடிதம் வழங்கப்பட்டது.

சம்பவங்களுக்கு பொறுப்பேற்று பதவி விலகினால், எனக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி தருவதாகக் கூறினார். எனினும் அவ்வாறான வரப்பிரசாதங்களை நான் எதிர்பார்ப்பவன் அல்ல. நான் அவ்வாறு செய்தால் காவல்துறையினரைக் காட்டிக்கொடுப்பதாக அமைந்துவிடும். தவறு செய்யாமல் தவறை ஏற்றுக்கொள்வதா?

பாதுகாப்பில் காணப்படும் ‘ பொறிமுறைத் தவறே’ இதற்குக் காரணம். அது மாத்திரமன்றி ‘பாதுகாப்புத் துறையில் காணப்படும் ‘நெறிமுறை ஒருங்கின்மை’யும் இதற்கான காரணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *