உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சம்பிக்க ரணவக்க எதிர்ப்பு
உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனைக்கு சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அதன்போது, இந்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக விரிவாக பரிசீலிக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் கூறியிருந்தனர்.
இந்த நிலையிலேயே, அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இந்தப் பொறிமுறையை அமைக்கும் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
“இந்த விவகாரத்தை மேலும் இழுத்தடிக்காமல், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று, அவர் கூறியிருக்கிறார்.
அத்துடன் இந்த விவகாரத்தில் அனைத்துலக தலையீட்டினை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.