பாகிஸ்தான் மீதான தாக்குதல் – சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விளக்கம்
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று அதிகாலை இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்துள்ளது.
காஷ்மீரின் புல்வாமாவில் இந்திய துணை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் ஊடுருவிய இந்திய விமானப்படையின் 12 மிராஜ்-2000 போர் விமானங்கள், பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களின் மீது குண்டுகளை வீசியிருந்தன.
இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தமது இந்த தாக்குதலை அனைத்துலக சமூகத்திடம் நியாயப்படுத்துவதில் இந்திய வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்று அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கமளித்திருந்தார்.
அதேவேளை, நேற்று ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் புதுடெல்லியில் உள்ள தூதுவர்கள் மற்றும் இந்தியாவின் அயல் நாடுகளான சிறிலங்கா, பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் மற்றும், பிரேசில், ஜேர்மனி, குவைத், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு, இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலேயினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புல்வாமாவில் இந்தியப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னரும் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் நிலைமைகளை பகிர்ந்து கொண்டிருந்தார்.
அதையடுத்து, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், சிறிலங்கா வெளிவிவாகர அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொடர்பு கொண்டு இந்த விவகாரங்கள் குறித்து பேசியிருந்தார்.
இந்த நிலையிலேயே இந்திய வெளிவிவகாரச் செயலர் மீண்டும் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்களுக்கு நிலைமைகளை விளக்கியுள்ளார்.