மேலும்

நாடாளுமன்ற குழப்பம் – 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், கடந்த ஆண்டு நொவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில், இடம்பெற்ற குழப்பங்களின் போது,  59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறிழைத்திருப்பதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 54 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐதேகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், ஜேவிபி உறுப்பினர்  ஒருவருமே தவறிழைத்திருப்பதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளை 77 இன் கீழ், தவறிழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற சுயாதீன விசாரணைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து, அவற்றை விரைவில் பூர்த்தி செய்து, சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பங்கள் குறித்து விசாரிப்பதற்காக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவே இந்தப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

அத்துடன், தவறிழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த, எஸ்.பி.திசநாயக்க, ஆனந்த அளுத்கமகே, பிரசன்ன ரணவீர, பியல் நிஷாந்த, பத்ம உதயசாந்த, டிலான் பெரேரா, தினேஷ் குணவர்த்தன, லொகான் ரத்வத்த, ஜயந்த சமரவீர, றோகித அபேகுணவர்த்தன, திலங்க சுமதிபால, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, திலும் அமுனுகம, இந்திக அனுருத்த, சிசிர ஜெயக்கொடி, காஞ்சன விஜயசேகர, பிரியங்கர ஜயரட்ண, சுசந்த புஞ்சிநிலமே, பவித்ரா வன்னியாராச்சி, மகிந்தானந்த அளுத்கமகே, ரஞ்சித் சொய்சா, எஸ்.எம்.சந்திரசேன, டி.பி சானக, அருந்திக பெர்னாண்டோ, டலஸ் அழகபெரும, விமலவீர திசநாயக்க, ஷெஹான் சேமசிங்க, தேனுக்க விதானகமகே, அனுராத ஜெயரத்ன, சாரதி துஸ்மந்த, சனத் நிஷாந்த, நிமல் லான்சா, விஜித பேருகொட, சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, ஜனக பண்டார, ரொமேஷ் பத்திரன, மொஹான் பிரியதர்சன, ரோஷன் ரணசிங்க, வாசுதேவ நாணயக்கார, சி.பி. ரத்நாயக்க, ரி.பி.ஏக்கநாயக்க, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, தாரக பாலசூரிய. லக்ஸ்மன் வசந்த பெரேரா, ஜனக பண்டார தென்னக்கோன், ஜானக வக்கும்புற, பந்துல குணவர்தன, நிசாந்த முதுஹெட்டிகம, சாலிந்த திசநாயக, பிரேமலால் ஜெயசேகர, திலிப் ஆராய்ச்சி, நிரோஷன் பிரேமரத்ன, ஆகியோரும்,

ஐதேகவைச் சேர்ந்த பாலித தெவரப்பெரும, சந்திம கமகே, ரஞ்சன் ராமநாயக்க, துஷார இந்துனில், ஆகியோரும், ஜேவிபியை சேர்ந்த விஜித ஹேரத்தும், தவறிழைத்தவர்களாக விசாரணைக் குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை நடத்தியிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சபாநாயகரை செயற்படாவிடாமல் தடுத்தமை, சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, சபாநாயகரை அச்சுறுத்தியமை, சபையில் இருந்தவர்கள் மீது புத்தகங்கள் மற்றும் போத்தல்களால் வீசியமை, சபாநாயகரின் மேசையிலிருந்த ஒலிவாங்கிக் கட்டமைப்புக்களை சேதப்படுத்தியமை போன்ற பல்வேறு தவறுகள் விசாரணை ஆணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *