மேலும்

சீன வங்கிக் கடனில் இழுபறி –  பிணைமுறிகள் மூலம் 2 பில்லியன் டொலரை திரட்ட திட்டம்

சீன வங்கியிடம் இருந்து கோரப்பட்ட கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பிணைமுறி சந்தையில் 2 பில்லியன் டொலர்களை திரட்டும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அனைத்துலக நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர், புதிய பிணைமுறிகளைக் கோரி, சிறிலங்கா மத்திய வங்கி வரும் மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பை வெளியிடவுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் கடன்களை திருப்பி செலுத்துவதில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த ஆண்டில் 5.9 பில்லியன் டொலரை திருப்பிச் செலுத்த வேண்டும்.

இதில், 2.6 பில்லியன் டொலர், முதல் காலாண்டுக்குள் செலுத்த வேண்டியவையாகும். ஏற்கனவே வைப்பில் இருந்த 1 பில்லியன் டொலரை சிறிலங்கா அரசாங்கம் வெளிநாட்டுக் கடனுக்காக திருப்பிச் செலுத்தியுள்ளது.

இந்த நிலையில், சீன வங்கியிடம் 300 மில்லியன் டொலர் கடன் கோரப்பட்டது. எனினும், சீன புத்தாண்டு விடுமுறைகளால் இந்த கடனுக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் குறித்த நீண்ட பேச்சுக்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடன் ஜனவரி மாத கடைசியில் இறுதி செய்யப்படும் என்றும், இன்னொரு 700 மில்லியன் டொலர் மார்ச்  முடிவுக்குள்ளும் இறுதி செய்யப்படும் என்றும் முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

இவற்றில் ஏற்பட்டுள்ள தாமதங்களை அடுத்து, சிறிலங்கா அரசாங்கம், 1 பில்லியன் டொலருக்கான பிணைப் பத்திரங்களை  வெளியிட்டும், 1 பில்லியன் டொலருக்கான பான்டா மற்றும் சாமுராய் பிணைமுறிகளின் மூலமும் 2 பில்லியன் டொலரைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, சீன வங்கியுடன் மீண்டும் பேச்சுக்களை பெப்ரவரி 20ஆம் நாள் ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் சிறிலங்கா மத்திய வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *