1.95 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு அமைச்சரவை அங்கீகாரம்
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பலாலி விமான நிலையத்தை 1965 மில்லியன் ரூபா செலவில், அபிவிருத்தி செய்யும் திட்டம் ஒன்றுக்கு கடந்த ஆண்டு ஒக்ரோபர் 23ஆம் நாள், சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், சிறிலங்கா அமைச்சரவையில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான புதிய அமைச்சரவைப் பத்திரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 100 பயணிகளை ஏற்றக் கூடிய விமானங்கள் வந்து செல்வதற்கு ஏற்றவகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும்.
இந்த அபிவிருத்திப் பணிகள் சிறிலங்கா விமானப்படையின் மூலம் மேற்கொள்ளப்படும்.
இதன் முதற்கட்டமாக, சாத்திய ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக, விமான நிலைய, விமானசேவைகள் நிறுவனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த சாத்திய ஆய்வுக்குப் பின்னர், விமான நிலைய அபிவிருத்திக்கான தொழில்நுட்பக் குறிப்புகளில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.