கீரிமலை ஆடம்பர மாளிகை – வடக்கு மாகாணசபைக்கு கைவிரித்தார் சிறிசேன
காங்கேசன்துறை, கீரிமலையில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட ஆடம்பர மாளிகையை, சுற்றுலா சபையிடம் கையளிப்பது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளார்.
உயர்பாதுகாப்பு வலயத்தில் சிறிலங்கா கடற்படையின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்றில் சிறிலங்கா கடற்படையினர் வசம் உள்ள இந்த ஆடம்பர மாளிகை மற்றும் 100 ஏக்கர் காணிகளை சுற்றுலா சபையிடம் கையளிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த ஆடம்பர மாளிகையை வடக்கு மாகாண சபையிடம் கையளிக்குமாறு, 2015ஆம் ஆண்டு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பில் வடழக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
அதேவேளை, யாழ். பல்கலைக்கழகமும் இந்த மாளிகையை தமக்குத் தருமாறு கோரியிருந்தது.
எனினும், இந்த ஆடம்பர மாளிகையை சிறிலங்கா சுற்றுலா சபையிடமே அதிபர் மைத்திரிபால சிறிசேன கையளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, காங்கேசன்துறை, கீரிமலை பகுதிகளில் உள்ள தனியார் காணிகள் பல சிறிலங்கா அதிபரின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்படவுள்ளன.
இந்த வாரம் சிறிலங்கா அதிபர் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.