மேலும்

சுங்கப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக சட்டநடவடிக்கை – பி.எம்.எஸ்.சார்ள்ஸ்

சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக, சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பி.எம்.எஸ்.சார்ள்ஸ், தெரிவித்துள்ளார்.

சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து, பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்டதை அடுத்து, திணைக்கள அதிகாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், துறைமுகங்களில் சரக்குப் பெட்டகங்கள் சோதனையிடப்படாமல் தேங்கியுள்ளன.

இதனால் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கிடைக்க வேண்டிய பல பில்லியன் ரூபா வருமானம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பி..எம்.எஸ்.சார்ள்ஸ்,  தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதற்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

“என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.

உரிய அறிவுறுத்தல்கள் எதுவுமின்றி, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து நிதி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய இந்தத் திடீர் இடமாற்றம், பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

சுங்கத் திணைக்களம், கடல் போன்றது. சட்டவிரோதமான கடத்தல்கள், வியாபாரங்கள் என அனைத்தும், சுங்கத் திணைக்களத்தினூடாகவே இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில், எனக்குக் கீழுள்ள அதிகாரிகளே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே, திடீரென நான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன்.

நிதி அமைச்சுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் இருவரால், எனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பிலும், எனது திடீர் இடமாற்றம் தொடர்பாகவும் சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *