கரு வீட்டில் ஒரு மணி நேரம் ரணிலுடன் மனம் விட்டுப்பேசினார் மைத்திரி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரவு நீண்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான, சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்பு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் நேற்றுமுன்தினம் மாலை அறிவித்திருந்தது.
இதையடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சபாநாயகர் கரு ஜெயசூரியவும், ரணில் விக்கிரமசிங்கவும் மூடிய அறைக்குள் இரகசிய பேச்சு நடத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தப் பேச்சு 10 நிடங்களே இடம்பெற்றது என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்த போதும், ஒரு மணித்தியாலம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும், புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகர் கரு ஜெயசூரியவின் இல்லத்திலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.
சுமுகமான சூழலில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்க சிறிலங்கா அதிபர் இணங்கியுள்ளார்.
நேற்றிரவு மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், தொலைபேசியில் உரையாடினர். இதன்போதே, நாளை காலை ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்பது என்று முடிவாகியுள்ளது.
முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று, சிறிலங்கா அதிபர் கூறிவந்தார். எனினும், உச்சநீதிமன்றத்தை தீர்ப்பை அடுத்து, ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களின் பின்னரே அவர் தனது இறுக்கமான பிடிவாதத்தில் இருந்து விலகினார் என்றும் கூறப்படுகிறது.