பதவி விலகும் மகிந்தவின் முடிவுக்கான காரணம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், ஒக்ரோபர் 26ஆம் நாள் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, இன்று தனது பதவியை விட்டு விலக முடிவு செய்திருக்கிறார்.
இதற்கான காரணம் குறித்து, சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன விளக்கமளித்துள்ளார்.
“தற்போதைய அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தி இன்று சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட பின்னர், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகிக் கொள்வார்.
பிரதமர் மற்றும் அமைச்சர்களாகச் செயற்பட மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் நேற்று மறுத்ததை அடுத்தே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் முன்முறையீட்டை உச்சநீதிமன்றம், ஜனவரி 16, 17, 18ஆம் நாள்களில் நடத்தவுள்ளது. இந்த மனு மீது ஜனவரி 19ஆம் நாளே தீர்ப்பு அளிக்கப்படும்.
நேற்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுவுடன், சிறிலங்கா அதிபரைச் சந்தித்த போது, பதவி விலகும் தனது முடிவை மகிந்த ராஜபக்ச அறிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனவரி 19ஆம் நாள் வெளியாகும் வரை, ஒரு அரசாங்கம் இல்லாமல் நாடு இருக்க முடியாது என்று மகிந்த ராஜபக்ச கூறினார்.
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறிலங்கா அதிபருக்கு உதவியாக இருப்பதுடன், பொதுத் தேர்தலை வலியுறுத்தும் பரப்புரைகளையும் முன்னெடுக்கும்.
புதிய பிரதமர் யார் என்பதை சிறிலங்கா அதிபரே முடிவு செய்வார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்” எனவும் அவர் கூறினார்.