மேலும்

ரணிலுக்கு நிபந்தனை விதிப்பது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக, நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இறுதி முடிவு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐதேமு ஆட்சியமைப்பதற்கு, கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதற்கு, முன்னர், தமிழர்களின் நலன்கள் தொடர்பாக எழுத்துமூலம் உறுதிமொழி பெற வேண்டும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், ரெலோவின் கோரிக்கைக்கு அமைய, நேற்று மாலை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

கொழும்பில், எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு ஆரம்பமான இந்தக் கூட்டம். இரவு 8 மணி வரை தொடர்ந்தது.

இந்தக் கூட்டத்தில் எழுத்துமூல உத்தரவாதம் கோருவது, அரசியல் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற தொனியில் சம்பந்தன் கருத்து வெளியிட்டார் என்று கூறப்படுகிறது.

எனினும், ரணில் விக்கிரமசிங்கவிடம் விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், அவற்றில் சில விடயங்கள் தொடர்பாக இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வலுப்படுத்தல் மற்றும் வடக்கு கிழக்கை தற்காலிகமாகவேனும் இணைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இன்னமும் பேசி இணக்கப்பாடு காணப்படவில்லை.

இந்த நிலையில், ஒருங்கிணைப்புக் குழு வரும் வெள்ளிக்கிழமை கூடி ஆராய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின், சார்பில் மாவை, சேனாதிராசா மற்றும் சுமந்திரன் ஆகியோரும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஜனா கருணாகரன், சிவாஜிலிங்கம், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும், புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *