மேலும்

சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு

ஒக்ரோபர் 26 காலை 10 மணியளவில், சிறிலங்காவின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்தது. தொலைபேசியில் மகிந்த ராஜபக்சவின் அரசியல் எதிரியான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டிருந்தார்.

தொலைபேசியில் அதிபர் இல்லத்திற்கு வருமாறு தெளிவாகக் கூறப்பட்டது. சில மணித்தியாலங்களின் பின்னர், ராஜபக்ச நாட்டின் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதை அதிபர் சிறிசேன உறுதிப்படுத்தியிருந்தார்.

இதுவே தற்போது இலங்கைத் தீவில் இடம்பெறும் அரசியல் குழப்ப நிலைக்கான பிரதான காரணமாகும். இதனைத் தொடர்ந்து சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்ததுடன் ஜனவரி 05ல் தேர்தல் இடம்பெறும் எனவும் அறிவித்திருந்தார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற திடீர் அரசியல் சதிக்கான முக்கிய காரணகர்த்தாக்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. இவ்வாண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவின் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தன்னிச்சையான தீர்மானங்களே காரணம் என சிறிசேன கருதினார்.

கடந்த மாதம் சிறிலங்காவின் அரசியலில் ஏற்பட்ட மாற்றமானது ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி மற்றும் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த ராஜபக்ச மற்றும் விக்கிரமசிங்க உள்ளிட்ட உயர் தலைமைகளை வியப்பில் ஆழ்த்தியது.

‘மகிந்த ராஜபக்சவிற்கு விடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பை அடுத்து அவர் சிறிசேனவைச் சந்திப்பதற்குத் தயாரானார். சந்திப்பிற்கான இடம் சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் மீண்டும் அந்த இடம் மாற்றப்பட்டு இறுதியில் இந்தச் சந்திப்பானது பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள அதிபர் செயலகத்தில் இடம்பெற்றது.

அன்றைய நாள் சிறிசேன இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்வார் என்பதை ராஜபக்ச ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை’ என சிறிலங்கா அரசாங்கத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவர் தெரிவித்தார்.

பல மாத இரகசிய திட்டமிடல்கள் மற்றும் முக்கிய தொலைபேசி அழைப்பை அடுத்து மகிந்த ராஜபக்ச, அதிபர் சிறிசேனவிற்கு முன்னால் பிரதமராகப் பதவியேற்றமையானது சிறிலங்கா அரசியலில் முற்றுமுழுதான திருப்பத்தை ஏற்படுத்தியது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சிறிசேனவிடம் ராஜபக்ச தோல்வியுற்றிருந்தார்.

சிறிலங்காவில் அரசியல் சதித்திட்டம் மேற்கொள்ளப்படுவதற்கு மூன்று மாதங்களின் முன்னர், ராஜபக்சவை பிரதமராக்குவது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் சிறிசேனவால் மேற்கொள்ளப்பட்டதாக பல்வேறு தரப்புக்கள் கூறுகின்றன.

‘சிறிசேனவை ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்ச சந்தித்த பின்னர் ராஜபக்சவைப் பிரதமராக்குவது தொடர்பாக குறைந்தது நான்கு முக்கிய சந்திப்புக்கள் இடம்பெற்றன. ஆனால் தொடர்ந்தும் தான் அதிபராக இருக்க வேண்டும் என சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட நிபந்தனையே ராஜபக்ச தரப்பிற்கு சவாலாகக் காணப்பட்டது’ என ராஜபக்சவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

‘ராஜபக்ச தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட சில வழக்குகள் தொடர்பாக சிறிசேனவிடம் நியாயப்படுத்திய அதேவேளையில் அரசாங்கத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டமை தொடர்பாக சிறிசேன கவலையடைந்திருந்தார்’ என ராஜபக்சவிற்கு நெருக்கமான உயர்மட்ட அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

‘சிறிலங்கா ரூபா வீழ்ச்சியடைந்தமை, வேலையற்றோர் பிரச்சினை மிக மோசமான நிலையை அடைந்தமை, தொழில்வாய்ப்புக்களை உருவாக்கத் தவறியமை, 2015 தேர்தல் பரப்புரையின் போது வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமை மற்றும் கொழும்பில் 400 கோடி ரூபாய் பெறுமதியான 15000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் நிறைவேற்றப்படாமை போன்றன தொடர்பாக சிறிசேன அதிருப்தியுற்றிருந்தார்’ என விக்கிரமசிங்கவின் ‘குறைபாடுகள்’ தொடர்பாக கூறியபோது சிறிசேனவிற்கு நெருக்கமான உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்திற்கும் அதிபர் சிறிசேன மீதே பழிசுமத்தப்படுகிறது’ என ராஜபக்ச அரசாங்கத்தில் சிறிலங்கா பிணைப்பத்திர பரிமாற்ற ஆணைக்குழு மற்றும் சிறிலங்கா சுற்றுலாத்துறைத் தலைவராக கடமையாற்றிய நாலக்க கொடஹேவ சுட்டிக்காட்டினார்.

விக்கிரமசிங்க இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளமையும் சிறிசேனவிற்கு ஐயத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவின் றோ புலனாய்வு அமைப்பானது தன்னைப் படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டுவதாக அமைச்சரவை கூட்டத்தில் சிறிசேன குற்றம்சாட்டியிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் தான் அவ்வாறு கூறவில்லை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சிறிசேன உறுதிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான அரசியல் குழப்பங்களின் மத்தியில் கடந்த மாதம் 26ம் திகதி மகிந்த ராஜபக்ச நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்டமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

‘ஒக்ரோபர் 26 அன்று பிற்பகல் முக்கிய சந்திப்பொன்றுக்காக வருமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக எமக்கு தெரியப்படுத்தவில்லை’ என ராஜபக்சவின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

‘ராஜபக்சவிற்குக் கூட என்ன நடக்கப் போகின்றது என்பது தொடர்பாக தெளிவாகத் தெரியவில்லை. பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்ட ராஜபக்சவின் நெருக்கமான அரசியல் தலைவர்கள் கூட, சாதாரண உடையிலேயே வந்திருந்தனர்’ என ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச முஸ்லிம் நிறுவனத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போது ‘முக்கிய சந்திப்பொன்றுக்காக’ உடனடியாக வருமாறு தொலைபேசியில் அழைக்கப்பட்டிருந்தார். ‘கோத்தபாய இந்த நிகழ்வில் தனது உரையை முடித்த போது, ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றிருந்தார்’ என கோத்தபாயவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

சிறிசேன சட்ட ஆவணங்களுடன் மகிந்த ராஜபக்சவிற்காக காத்திருந்ததாகவும் அதாவது மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் சட்ட நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதையும் சிறிசேன உறுதிப்படுத்தியதாகவும் சில வட்டாரங்கள் கூறுகின்றன.

‘இந்தச் சந்திப்பின் போது, 2015 தேர்தல் பரப்புரையில் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் தான் மகிந்த ராஜபக்சவுடன் கரங்கோர்ப்பதைத் தவிர வேறுவழியில்லை என சிறிசேன சுட்டிக்காட்டியிருந்தார்’ என இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க ஆகிய இருவரின் ஆதரவில்லாமல் இந்தச் சந்திப்பு இடம்பெறுவது சாத்தியமற்றது என வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ‘இந்த மாற்றத்திற்கு பசில் மற்றும் திஸநாயக்க ஆகிய இருவருமே முக்கிய காரணகர்த்தாக்கள்’ என இந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ரணில் விக்கிரமசிங்க பதவியிலிருந்து விலக்கப்பட்ட பின்னர் இது தொடர்பாக மகிந்த ராஜபக்சவின் 31 வயதான மகன் நாமல் ராஜபக்ச ஊடக மாநாடு ஒன்றைக் கூட்டியிருந்தார்.

‘கொழும்பு, ரொரிங்ரன் அவென்யுவில் உள்ள நாமல் ராஜபக்சவின் இல்லம் மற்றும் அவரது அலுவலகமே அனைத்து அரசியல் காய்நகர்த்தல்களின் முக்கிய மையமாக விளங்குகிறது’ என ராஜபக்ச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

விக்கிரமசிங்க அரசியல் சாசனத்திற்கு எதிராக பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்கின்ற விமர்சனத்தை நாமல் ராஜபக்ச நிராகரித்திருந்தார். ‘விக்கிரமசிங்க இதனையே கடந்த காலத்தில் செய்திருக்கிறார். 2015ல் சிறிசேனவால் விக்கிரமசிங்க பிரதமராக அறிவிக்கப்பட்ட போது இவர் 43 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தார். ஆகவே இது ஜனநாயகமா?

மக்களின் கோபத்திற்கு ஆளாவதைத் தவிர்ப்பதற்காக உள்ளுராட்சித் தேர்தலை விக்கிரமசிங்க இரண்டரை ஆண்டுகள் தாமதமாக நடாத்தினார். ரணில் விக்கிரமசிங்க அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட்ட போது ஏன் ஒருவரும் இவரை எதிர்த்துக் குரல்கொடுக்கவில்லை?’ என நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பினார்.

நவம்பர் 01 அன்று கோத்தபாய, விக்கிரமசிங்கவைச் சந்தித்தார். இவர் அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் ராஜபக்ச ஆகியோரின் பிரதிநிதியாக விக்கிரமசிங்கவைச் சந்தித்ததுடன் விக்கிரமசிங்க அலரி மாளிகையை விட்டு பாதுகாப்புடன் வெளியேறுவதற்கான உத்தரவாதத்தையும் வழங்கியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

ஆங்கிலத்தில்  – Arun Janardhanan
வழிமூலம்        – The Indian express
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *