மேலும்

ஐதேமுவின் அடுத்த ‘செக்’  மகிந்தவின் அமைச்சர்களுக்கு

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் அதிகாரிகளுக்கான ஊதியம், மற்றும் பிற சலுகைகள், வசதிகளை இடைநிறுத்துவது தொடர்பான பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசிய முன்னணி இன்று சமர்ப்பித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் பிரதமர் செயலகத்துக்கான நிதிஒதுக்கீட்டை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை கடந்த 19ஆம் நாள் சபாநாயகரிடம் கையளித்திருந்த நிலையில், அடுத்த கட்டமாக அமைச்சர்களின் செயற்பாட்டை முடக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

“மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளது.  அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவின் கீ்ழ் நாடாளுமன்றமே அரசாங்க பொது நிதியை கட்டுப்படுத்துகிறது.

எனவே, கடந்த 15ஆம் நாளுக்குப் பின்னர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்  மற்றும் அவர்களின் அதிகாரிகளுக்கான ஊதியத்தை பொது நிதியில் இருந்து வழங்குவதற்கு அதிகாரம் இல்லை.

அத்துடன் அரசாங்க பொது நிதியில் இருந்து வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவோ, உள்நாட்டில் உலங்குவானூர்திகளில் பயணிக்கவோ முடியாது. இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்” என்றும் அந்தப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, சம்பிக்க ரணவக்க, அர்ஜூன ரணதுங்க, மனோ கணேசன், ஜெயம்பதி விக்கிரமரத்ன ஆகியோர் இந்த பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஒழுங்குப் பத்திரத்தில் சேர்ப்பு

அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் வசமுள்ள பிரதமர் செயலகத்துக்கான, நிதி ஒதுக்கீடுகளை ரத்துச் செய்வது தொடர்பாக, ஐதேகவினரால் முன்வைக்கப்பட்ட பிரேரணை எதிர்வரும் 29ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கடந்த 19ஆம் நாள் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணை எதிர்வரும் 29ஆம் நாள் நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்  வகையில் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *