மேலும்

இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்க மகிந்தவுக்கு அமைச்சரவை அனுமதி

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை  சமர்ப்பிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்னமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான அரசாங்க செலவினங்கள் எப்படி கையாளப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தநிலையில், வரும் ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான முதல் காலாண்டில் அரசாங்கத்தின் செலவுகளுக்கான, நிதி தேவைகளை நிறைவேற்றுவதற்காக- கணக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த நிதிப் பிரேரணையை வரைவதற்கு அனுமதி கோரும் பத்திரத்தை, சர்ச்சைக்குரிய பிரதமரும், நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ச நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து, இந்த நிதிப் பிரேரணையை அரச சட்டவரைஞர் மூலம் வரைவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டம் குறித்த கணக்கு அறிக்கை வரையப்பட்டு, மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பித்து, இரண்டு வாரங்களுக்குள் அங்கீகாரம் பெறப்படவுள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, நிதியமைச்சின் செயலர் ஆட்டிக்கல,  தேசிய பொருளாதார சபையின்  தலைவர் லலித் சமரக்கோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வரும் ஜனவரி 10ஆம் நாள் 1000 மில்லியன் டொலர்  கடன் மற்றும் அதற்கான வட்டியை திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பது குறித்தும், இந்தக் கூட்டத்தில்,  கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டியதில்லை என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, இடைக்கால வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, மீண்டும் மோதல்கள் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில், மகிந்த ராஜபக்சவினால் நிதியமைச்சராக அவர் கையெழுத்திட முடியாது என்று ஐதேக தரப்பு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *