மேலும்

குழப்பத்தின் உச்சியில் மகிந்த – மைத்திரி தரப்பு

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மற்றும் நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக அறிவித்துள்ள சபாநாயகரின் முடிவு என்பன, மகிந்த- மைத்திரி தரப்பினரை கடும் குழப்பத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், நாளை நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்போம் என்று நாமல் ராஜபக்ச தமது கீச்சகப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.

அதேவேளை,  பிரதமரின் செயலகத்தில் சற்று முன்னர் முடிவடைந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், தற்போதைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில், . அதற்கு மாறான கருத்தை முன்வைத்துள்ளனர்.

நாளை நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்று நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

எனினும், நாளை காலை நாடாளுமன்றத்தில் தமது கட்சியினர் ஒன்று கூடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாளை நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது என்றும் விமல் வீரவன்ச கூறினார்.

மகிந்த- மைத்திரி தரப்பு ஒருமித்த முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் உள்ளதை இது காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நாளை பிரதமரையும், அமைச்சர்களையும் சபாநாயகர் நியமிப்பார் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் அதற்கு அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை என்று நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

அத்துடன், உச்சநீதிமன்றத்தின் முழு நீதியரசர்களையும் உள்ளடக்கிய அமர்வு மூலம் இந்த மனுக்களை விசாரிக்குமாறு கோரவுள்ளதாகவும், அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர்கள் மிகவும் சோகமான நிலையிலேயே காணப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *