மேலும்

சிறிலங்காவில் என்ன நடக்கிறது? – செய்திகளின் சங்கமம்

இன்று காலை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவைச் சந்தித்த ஐதேகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக கலந்துரையாடியதுடன், ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளது.

ஜனவரி 5 வரை அமைச்சர்கள் 

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போதும், அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும், இடைக்கால அரசின் அமைச்சர்களாக தொடருவார்கள் என்று அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தொடர்ந்தும், ஜனவரி 5ஆம் நாள் வரை இடைக்கால அரசின் அமைச்சர்களாக தொடருவார்கள்.

பிரதி, மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களே அந்தப் பதவிகளில் பணியாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.

பொதுஜன முன்னணியில் நாமல்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, இன்று பொதுஜன முன்னணியுடன் தாம் இணைந்து கொள்வதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கீச்சகப் பக்கத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியினர் தாவுகின்றனர்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தாம் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளனர்.

நாமல் ராஜபக்ச இன்று தாம் பொதுஜன முன்னணியில் இணைவதாக அறிவித்த நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஷேகான் சேமசிங்க, காஞ்சன விஜேசேகர, சானக டினுசன் ஆகியோர், தாமும் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளனர்.

கலைப்புக்கு கருவுமே ரணிலும் பொறுப்பு

நாடாளுமன்றத்தை இரண்டு ஆண்டுகள் முன்னரே கலைக்கும் நிலைக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைத் தள்ளியதற்கு, ரணில் விக்கிரமசிங்கவும், கரு ஜெயசூரியவுமே பொறுப்பு என்று அமைச்சர் தினேஸ் குணவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் முறையாக விசாரிக்கத் தவறியதால் தான், அவரைப் பதவிநீக்கம் செய்யும் முடிவுக்கும், நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தல் நடத்தும் முடிவுக்கும் சிறிலங்கா அதிபரை தள்ளியது.

ரணில் விக்கிரமசிங்கவும் கரு ஜெயசூரியவும் அராஜக நிலையை ஏற்படுத்த முயன்றனர். அலரி மாளிகையை ரணில் ஆக்கிரமித்தார், சபாநாயகர் தனது எல்லையை மீறி செயற்பட்டார் என்றும் குற்றம்சாட்டினார்.

வெற்றிலையில்  மொட்டு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் சிறிலங்கா பொதுஜன முன்னணி போட்டியிடும் என்றும், அந்தக் கட்சியின் நிறுவுனரான பசில் ராஜபக்சவை இதற்கு இணங்க வைத்திருப்பதாகவும், பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமையவே தாம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சித் தலைவராக மகிந்த?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பில் திருத்தம் செய்து, கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்சவை  நியமிப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளார் என்று கட்சியின் உள்ளக வட்டாரங்களை் தெரிவித்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீரவை பதவியில் இருந்து நீக்கவும், மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகா ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்கவும் சிறிலங்கா அதிபர் இணங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு 

நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலை நடத்த சிறிலங்கா அதிபர் எடுத்த முடிவு சட்டரீதியானதே, அரசியலமைப்புக்கு உட்பட்டதே என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு உள்ளது. அந்த அதிகாரத்தின்படியே அவர் செயற்பட்டுள்ளார். 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், சிறிலங்கா அதிபருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது. அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் போது, நாடாளுமன்றத்தை அவர் முன்கூட்டியே கலைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கரு ஜெயசூரியவே காரணம்

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் முடிவில், சபாநாயகர் கரு ஜெயசூரியவின் செயற்பாடுகளும் தாக்கம் செலுத்தியதாக, வெளிவிவகார அமைச்சர்  சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை 14ஆம் நாள் கூட்டும் போது, சபாநாயகர் நிலையியல் கட்டளைகளுக்கு மாறாக செயற்பட முயற்சித்திருந்தார். அதனைக் கருத்தில் கொண்டே நாடாளுமன்றத்தைக் கலைக்க சிறிலங்கா அதிபர் முடிவு செய்தார்” என்றும் அவர் கூறியுள்ளார.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *