மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – என்ன சொல்கிறார்கள் இவர்கள்…?

சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா அதிபரின் இந்த நடவடிக்கைக்கு- அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லாத நிலையிலும், அதற்கான நடவடிக்கையில் அவர் இறங்கியிருப்பது, நாட்டை பாரிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

இதுகுறித்து அரசியல் கட்சிகள், பிரமுகர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வருமாறு.

ராஜித சேனாரத்ன (ஐதேக) –

சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பது சட்டவிரோதமான செயல். சிறிலங்கா அதிபர் முதலில், அரசியலமைப்புக்கு மாறாக, பிரதமரைப் பதவிநீக்கம் செய்தார். அதன் பின்னர் நாடாளுமன்றத்தை முடக்கினார்.

நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத நிலையில், அவர் இரண்டாவது சட்டவிரோத செயலாக, நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்கிறார்.

எனினும், ஐதேக பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்து தேர்தலுக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறது.

குசல் பெரேரா  (அரசியல் ஆய்வாளர்) –

சிறிலங்கா அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான ஜனநாயக விரோதச் செயல்களின் ஆகப் பிந்திய நடவடிக்கை தான், நாடாளுமன்றத்தைக்  கலைக்கும் செயல்.

இந்த அரசியலமைப்பு மீறல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது.

எமக்கு நல்லாட்சி தேவையென்றால், ஜனநாயகத்தை நிறுவி அதனைப் பலப்படுத்த வேண்டும்.

அஜித் பெரேரா – (ஐதேக)

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். ஜனநாயகத்தை உறுதிப்படுத்த போராடுவோம். மக்களின் உரிமைகளையும், ஜனநாயகத்தையும் சிறிலங்கா அதிபர் கொள்ளையிட்டு விட்டார்.

ஐதேக இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சந்தித்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் சட்டபூர்வ தன்மை குறித்து கலந்துரையாடும்.

சிறிலங்கா அதிபரின் சட்டவிரோத செயலுக்கு எதிராக, தேர்தல்கள் ஆணையாளர் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைக் கோருவார் என்று ஐதேக எதிர்பார்க்கிறது.

இப்போது, ஐதேகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் முடிவுக்கு சவாலை ஏற்படுத்துவது தான் முதல் பிரச்சினை. அடுத்த கட்டமாகவே, பிரதமர் வேட்பாளர் யார் என்று ஐதேக கலந்துரையாடும்.

ரில்வின் சில்வா (ஜேவிபி) –

சிறிலங்கா அதிபர் இரண்டாவது தடவையாக அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் தேவையான 113 பெரும்பான்மை பலம் கிடைக்காததால் தான் அவர் இதனைச் செய்துள்ளார்.

இதன் மூலம் அவர் நாட்டைப் படுகுழிக்குள் தள்ளி விட்டுள்ளார். நாட்டில் முதல் முறையாக, அதிபர் ஒருவர், நாட்டின் அரசியலமைப்பை மீறி தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஹரின் பெர்னான்டோ  (ஐதேக)-

இது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசியலமைப்பு என்னவென்று தெரியவில்லை.

இதன் எதிர்விளைவுகளைப் பற்றியோ தனது நடவடிக்கைகளினால் நாட்டில் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தே அவருக்குப் புரியவில்லை.

ஹர்ஷ டி சில்வா (ஐதேக) –

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன போலிப் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து சிறிலங்காவின் அரசியலமைப்பை கழிவறைக் கடதாசிக்கு  சமமானதாக்கி விட்டார்.

சிறிலங்கா அதிபர் அவர்களே எங்கள் நாட்டின் அதிகாரபூர்வ பெயரிலிருந்து ஜனநாயகம் என்பதை நீக்குவதற்கான இன்னொரு அரசிதழ் அறிவித்தலை வெளியிடுங்கள்.

 

கோத்தாபய ராஜபக்ச (முன்னாள் பாதுகாப்புச் செயலர்)

இந்த தேசத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் மக்களே.

மக்களின் இதயசுத்தியுடனான சக்தி எங்கள் நாட்டின் முக்கியமான தருணத்தில் உறுதித்தன்மை மற்றும் முன்னேற்றகரமான எதிர்காலத்தை வழங்க வேண்டும்.

மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *