மேலும்

நித்திகைக்குளத்தில் வெள்ளத்தில் சிக்கிய ஆறு பேர் உலங்குவானூர்தி மூலம் மீட்பு

முல்லைத்தீவு – அலம்பில், நித்திகைக்குளம் பகுதியில், சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட  ஆறு விவசாயிகளை சிறிலங்கா விமானப்படையினர், இன்று உலங்குவானூர்தி மூலம் மீட்டனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால், நித்திகைக்குளம் உடைப்பெடுத்து, அங்கு தேங்கியிருந்த நீர் முற்றாக வெளியேறியது. இதனால், அலம்பில், மணலாறு உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நித்திகைக்குளம் பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த ஆறு பேர், வெள்ளத்தில் சிக்கியிருந்தனர். அவர்களை தரைவழியாக மீட்க வழியில்லாத நிலையில் சிறிலங்கா விமானப்படையின் உதவி கோரப்பட்டது.

“திடீரென வெள்ளம் சூழ்ந்து கொண்டதால், சேனைப் பயிர்களுக்கு காவலுக்குச் சென்ற ஆறு விவசாயிகள், மரஉச்சியில் கட்டப்பட்டிருந்த தமது பரணில் சிக்கியிருந்தனர்.

இதையடுத்து, விமானப்படையின் எம்.ஐ.17 உலங்குவானூர்தி அங்கு அனுப்பப்பட்டு, ஆறு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

எனினும், வேறு யாராவது அங்கு சிக்கியுள்ளனரா என்று தேடும் பணியில் உலங்குவானூர்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளது” என்று, சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் கிகான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

வன்னிவிளாங்குளமும் உடைப்பெடுக்கும் ஆபத்து

அதேவேளை, வன்னிப் பகுதியில் பெய்து வரும் அடை மழையினால், குளங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதுடன் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வன்னிவிளாங்குளமும் உடைப்பெடுக்கும் ஆபத்து இருப்பதாக, விவசாய மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரியப்படுத்தியதை அடுத்து,  65 ஆவது டிவிசனைச் சேர்ந்த 57 இராணுவத்தினர், மண்மூடைகளைக் கொண்டு, பலவீனமாக இருந்த அணையை செப்பனிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *