மேலும்

இந்திய நாளிதழ்களின் பார்வையில் சிறிலங்காவின் அரசியல் குழப்பம்

சிறிலங்காவின் அரசியல் குழப்பங்கள் இந்தியாவில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்தியாவின் பிரதான ஆங்கில நாளிதழ்கள் பலவும், இந்த விவகாரம் குறித்து ஆசிரியர் தலையங்கங்களை வரைந்துள்ளன. முக்கிய இந்திய நாளிதழ்களின் ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பு இது.

சிறிசேன எதற்குத் துணிந்து நிற்கிறார்? ( டெக்கான் ஹெரால்ட் ஆசிரிய தலையங்கம்)

சிறிலங்காவில் அரங்கேறியிருக்கும் அரசியல் நாடகம் நிச்சயமற்ற நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. அதன் தாக்கங்கள் கடல்கடந்தும் உணரப்படும்.

தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் இருந்து தனது கட்சியை விலக்கிக் கொண்டு முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததன் மூலமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறார்.

பதவிநீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறிலங்கா அதிபரின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறியிருக்கிறார். சிறிலங்காவின் அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் பிரகாரம் சிறிலங்கா அதிபரல்ல, நாடாளுமன்றமே பிரதமரைப் பதவியிலிருந்து அகற்றமுடியும். அதனால் விக்கிரமசிங்கவை சிறிசேன பதவி நீக்கியது சட்டவிரோதமானது.

106 ஆசனங்களுடன் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியே நாடாளுமன்றத்தில் கூடுதலான ஆசனங்களைக் கொண்ட கட்சியாக விளங்குகிறது. சிறிசேனவுக்கும் ராஜபக்சவுக்கும் 95 எம்.பி.க்களின் ஆதரவே இருக்கிறது.

விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கியதற்கு அடுத்தநாள் சிறிசேன நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரை இடைநிறுத்தும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.சாதாரண பெரும்பான்மை ஆதரவுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கை இல்லாதநிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றுக்கு முகங்கொடுப்பதை முன்கூட்டியே தவிர்ப்பதற்கும் விக்கிரமசிங்கவின் பக்கத்தில் நிற்கும் எம்.பி.க்களை ராஜபக்ச தனது பக்கத்துக்கு இழுப்பதற்கு காலஅவகாசத்தைக் கொடுப்பதற்காகவுமே சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தை இடைநிறுத்தினார்.

இலங்கைத் தீவில் விவகாரங்கள் ஒரு முழுவட்டத்தைச் சுற்றிவந்து நிற்கின்றன.2014 டிசம்பர் வரை நண்பர்களாக இருந்த சிறிசேனவும் ராஜபக்சவும் 2015 ஜனவரி சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரிகளாக மாறினார்கள்.ராஜபக்சவை எதிர்த்து அந்த தேர்தலில் சிறிசேன போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இப்போது அவர்கள் இருவரும் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றுவதற்கு திரும்பவும் நண்பர்களாகியிருக்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ராஜபக்ச அதிகாரத்துக்கு மீண்டும் வந்திருக்கின்றமை இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தக் கூடியதாகும். அவரது ஆட்சிக்காலத்தின் போதுதான் சிறிலங்காவில் சீனா அதன் செல்வாக்கை வலுவாகக் கட்டியெழுப்ப அனுமதிக்கப்பட்டது; சிறிலங்கா, சீனாவின் கேந்திரமுக்கியத்துவ சொத்தாகியது.

ராஜபக்ச அண்மைய மாதங்களில் இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களைக் குறைத்துக் கொண்டாலும் கூட புதுடெல்லி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருப்பதை ஆதரித்து சீனா அவரை ஏற்கனவே வாழ்த்தியிருக்கிறது. சிறிசேனவும் ராஜபக்சவும் கூட்டாக ஆட்சியதிகாரத்தில் இருக்கும் நிலையில், சிறிலங்காவில் தனது முதலீடுகளினதும் நலன்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என்று சீனா உணருகிறது.

இந்தியா மிகவும் எச்சரிக்கையுடனே  நடந்து கொள்ள வேண்டும். சிறிலங்காவில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைக் கிளறிவிடக் கூடிய நடவடிக்கைகளில் சிறிசேனவும் ராஜபக்சவும் தீவிரமாக இறங்கக் கூடிய சாத்தியப்பாட்டை நிராகரிக்க முடியாது.

இந்தியாவின் புலனாய்வு நிறுவனமான ‘ றோ ‘ தன்னைக் கொலைசெய்வதற்கு சதி செய்வதாக கடந்தவாரம் சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறான குற்றச்சாட்டை அவர் முன்வைத்தது ராஜபக்ச ஆட்சியதிகாரத்துக்கு வருவதற்கேதுவாக களநிலைவரங்களை தயார் செய்வதற்காகவா?

சிறிசேனவும் ராஜபக்சவும் அண்மைய நிகழ்வுப் போக்குகளை நியாயப்படுத்துவதற்காக சிங்கள தேசியவாத சக்திகளை அணிதிரட்டுவதில் மும்முரமாக இறங்குவர் என்று எதிர்பார்க்கலாம்.எதிர்வரும் நாட்களில் இந்தியாவைக் குற்றஞ்சாட்டுவது சிங்கள அரசியல்வாதிகளுக்கு வசதியான கருவியாக மாறலாம்.

சிறிலங்காவில் ஒரு கட்சியை அல்லது ஒரு அரசியல்வாதியை இந்தியா ஆதரிக்குமேயானால், உள்நாட்டு விவகாரங்களில் அது தலையீடு செய்கின்றது என்று இலங்கையர்கள் குற்றஞ்சாட்டுவதற்கு இடம் கொடுப்பதாகி விடும்.

எனவே சிறிலங்காவில் தற்போதைய குழப்பநிலை தணியும் வரை இந்தியா அந்நாட்டு விவகாரங்களில்  முனைப்புக் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.தற்போதைய நெருக்கடியைத் தீர்த்துக்கொள்வது சிறிலங்காவின் வேலை. அந்த தீவு கேந்திர முக்கியத்துவமுடைய ஒரு அயல்நாடாகும்.

இந்தியா ஏற்கனவே அங்கு அதன் செல்வாக்கை இழந்து விட்டது.எந்த கட்சி அரசாங்கத்தை அமைக்கிறதோ, எவர் பிரதமர் பதவியில் அமருகிறாரோ அவர்களுடன் காரியமாற்றுவதற்கு இந்தியா தன்னைத் தயார்ப்படுத்தவேண்டும்.

(  29 ஒக்டோபர் 2018 )

தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய   அரசியல் நெருக்கடி ( த ஹிந்து ஆசிரிய தலையங்கம்)

ஆளும் கூட்டணியில் இருந்து தனது கட்சியை விலக்குவதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குப் பதிலாக முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கும் சிறிலங்கா சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு நாட்டைப் பெரும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நவம்பர் 16 வரை இடைநிறுத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மறுநாள் பிறப்பித்த உத்தரவினால் நிலைமை மேலும் சிக்கலாக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் சிறிசேனவுக்கும் பிரதமர் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான உறவுகள் விரைவாகச் சீர்குலைந்து கொண்டிருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாகும். அத்துடன்  ராஜபக்சவுடன் கூட்டுச் சேருவதற்கு  அவருடன் சிறிசேன  பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும் தெரிந்தன.

ஆனால், அவரின் சடுதியான இரகசிய தந்திரோபாயம் மூத்த அரசியல்வாதிகள் உட்பட சகலரையும் நினைக்க முடியாத  அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அரங்கேற்றப்பட்டிருக்கின்ற அரசியல் நாடகத்தின் விபரங்கள் விரிவாகத் தெரியவரும் முன்னதாகவே ராஜபக்ச முதல்நாள் வரை தனது பிரதம அரசியல் எதிரியாக விளங்கிய சிறிலங்கா அதிபர் முன்னிலையில் மகிழ்ச்சியுடன் பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

தன்னைப் பதவிநீக்கம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறியிருக்கும் விக்கிரமசிங்க இன்னமும் தானே பிரதமராக பதவியில் தொடருவதாக வலியுறுத்துகிறார்.225 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக நம்பிக்கையுடன் கூறுகின்ற அவர், சபையில் வாக்கெடுப்பை நடத்துமாறு ராஜபக்ச – சிறிசேன கூட்டுக்கு சவால் விடுத்திருக்கிறார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தியதன் மூலமாக, சிறிலங்கா அதிபர் சிறிசேன  நாடாளுமன்றத்தில் தேவையான ஆதரவைப் பெறுவதில் தனக்கிருக்கும்  பலவீனத்தை அம்பலப்படுத்தி விட்டார் என்றே தோன்றுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைபேசும் நடவடிக்கைகளும் அரசியல் விசுவாசம் கேள்விக்குள்ளாகக்கூடிய வியூகங்களும் முன்னெடுக்கப்படக் கூடிய அடுத்த இரு வாரங்களும் மிகவும் இக்கட்டானவையாக இருக்கும். இவையெல்லாம் சிறிலங்கா அரசியலில் ஒன்றும் புதுமையானவையுமல்ல.

ஆனால்,முற்றுமுழுதாக  சிறிசேனவின் செயற்பாடுகளின் விளைவாகவே தோற்றுவிக்கப்பட்டிருக்கும் அரசியல் கொந்தளிப்பு உண்மையில் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியதே.  சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சி கண்டுவரும் நிலையில் தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடி, அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த அரசியல் நெருக்கடி மூண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து விலக்காமலேயே ராஜபக்சவை பிதமராக நியமித்த சிறிசேனவின் செயல் அப்பட்டமான நிறைவேற்று அதிகாரத் துஷ்பிரயோகமே அன்றி வேறொன்றுமில்லை.

குறுகிய அரசியல் நலன்களினால் தூண்டப்பட்டு சிறிலங்கா அதிபர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் பாராளுமன்றச் செயன்முறைகளை அவர் அவமதித்திருக்கிறார் எனபதையே பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன.இந்த அவசர நடவடிக்கைகளில் அவர் நாட்டம் காட்டியதன் மூலமாக ஜனநாயகத்தை பாரதூரமான ஆபத்திற்குள் தள்ளிவிட்டிருப்பது மாத்திரமல்ல, 2015 ஜனவரி சிறிலங்கா அதிபர் தேர்தலில் தன்னை ஆதரித்த தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினத்தவர்களில் கணிசமான பிரிவினர் உட்பட இலங்கையர்களை ஏமாற்றியும் விட்டார்.

அரசியல் செல்வாக்கைச் சோதித்துப் பார்ப்பதற்கான சிறந்த அரங்கு நாடாளுமன்றமேயாகும்.நாடாளுமன்றச் செயன்முறைகளுக்கு புறம்பான அதிகாரப்போராட்டம் ( அதுவும் சட்டவிரோத வழிமுறைகளின் மூலமாக) அரசியல் குண்டர் வன்முறைகளையும் குழப்பநிலையையுமே அதிகரிக்கும்.

மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் வன்முறைகளில் இருந்தும் இரத்தக்களரியில் இருந்தும் படிப்படியாக  மீண்டு கொண்டிருக்கின்ற சிறிலங்கா பொருளாதார – சமூகச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்,2015 ஆம் ஆண்டில் திறந்து விடப்பட்ட ஜனநாயக வெளியில் இருந்து பின்னோக்கிச் செல்வதைத் தாங்கமாட்டாது.

ராஜபக்சவின் ஒரு தசாப்தகால எதேச்சாதிகார ஆட்சிக்குப் பிறகு ஜனநாயகப் பாதைக்கு நாட்டை மீண்டும் கொண்டு வரப்போவதாக வாக்குறுதியளித்த பிரத்தியேகமான அரசியல்  கூட்டணியொன்றிலேயே சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்தார்கள்.

ராஜபக்சவை கைவிட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிரணியின் பொதுவேட்பாளராகக் களமிறங்கி அவரைத் தோற்கடித்த சிறிசேன மீண்டும் அதே ராஜபக்சவுடன் கைகோர்ப்பதில் இருக்கக்கூடிய விசித்திரம் ஒருபுறமிருக்க, எந்த சுத்துமாத்து வழியில் என்றாலும் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு சிறிசேன கொண்டிருக்கு ஆசை மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

ஏற்கெனவே பெருஞ் சேதம் ஏற்படுத்தப்பட்டு விட்டது என்ற போதிலும் கூட , நாடாளுமன்றம் கூடும்போது (சாத்தியமானால் நவம்பர் 16 க்கு முன்னர்) நேர்மையான முறையிலான வாக்கெடுப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

( 29 ஒக்டோபர் 2018)

 சீன – சிறிலங்கா உறவுகள் மேலும் நெருக்கமாகும் – (ஹிந்துஸ்தான் ரைம்ஸ் ஆசிரியதலையங்கம் 

மீண்டும் இந்தியாவின் முக்கிய அயல்நாடொன்று நீண்டகாலத்துக்கு இழுபடக் கூடிய சிக்கலான குழப்ப நிலைக்கான சகல அறிகுறிகளையும் கொண்ட அரசியல் நெருக்கடியொன்றுக்குள் சிக்கியிருக்கிறது.

சிறிலங்கா சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே குறிப்பாக பொருளாதார விவகாரங்களில் அண்மைய சில மாதங்களாக முறுகல் அதிகரித்து வந்ததது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென விக்கிரமசிங்க பதவி நீக்கப்படுவார் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

விக்கிரமசிங்கவின் பதவி நீக்கம் முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியதிகாரத்துக்கு மீளவருவதற்கு வழியேற்படுத்தியிருக்கிறது.

கடந்த பெப்ரவரியில் உள்ளூராட்சி தேர்தல்களில் அவரது புதிய கட்சி பெருவெற்றி பெற்ற நாளிலிருந்து ராஜபக்ச அரசியல் அதிகார மையத்துக்குத் திரும்பி வருவதற்காக தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தியிருந்தார். அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு மறுநாள் சிறிலங்கா அதிபர் சிறிசேன நாடாளுமன்றத்தை நொவம்பர் 16 வரை இடைநிறுத்துவதற்கு பிறப்பித்த உத்தரவையடுத்து நெருக்கடி இன்னொரு திருப்பத்தை எடுத்திருக்கிறது.

நாடாராளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிப்பதற்கு தனக்கு உடனடியாக வாய்ப்புத் தரப்பட வேண்டும் என்று விக்கிரமசிங்க வலியுறுத்திக் கொண்டிருந்த நிலையிலேயே நாடாளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது.

விக்கிரமசிங்கவுடனான தனது கூட்டணியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சிறிசேன தீர்மானித்ததும் புதிய பொதுத்தேர்தலை நடத்துவதற்கு வசதியாக நாடாளுமன்றத்தைக் கலைத்திருந்தால் அது சரியான நடவடிக்கையாக இருந்திருக்கும்.

அடுத்த வருட இறுதியில் நடைபெறவிருக்கும் சிறிலங்கா அதிபர் தேர்தல், அதைத் தொடர்ந்து நடத்தப்பட வேண்டியிருக்கும் பொதுத்தேர்தல் ஆகியவற்றுக்கு முன்னதாக அதிகாரத்தைத் தக்கவைத்து தங்களது நிலைகளை வலுப்படுத்துவதே சிறிசேனவினதும் ராஜபக்சவினதும் பிரதானமான அக்கறை என்பதை நிகழ்வுப்போக்குகள் தௌளிவாக உணர்த்துகின்றன.

கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நீடித்த உள்நாட்டுப்போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த ராஜபக்ச போர்க்குற்றங்கள், ஊழல் மோசடி மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கம் தொடர்பில் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ச்சியாக முகங்கொடுக்க வேண்டியவராக இருக்கிறார்.ஆனால், தான் எந்த தவறையும் செய்யவில்லை என்று அவர் மறுத்து வருகிறார்.

அவரது மீள்வருகை அரசியல் எதிரிகளையும் ஊடகங்களையும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கிய ஒரு யுகத்துக்கு நாடு மீண்டும் திரும்பிச் செல்லக்கூடும் என்ற பீதியை சில வட்டாரங்களில் ஏற்கனவே கிளப்பியிருக்கிறது.

உள்நாட்டுப் போரில் விடுதலை புலிகளுக்கு எதிராக அரசாங்கப்படைகள் கண்ட வெற்றிக்கு அரசியல் தலைமையை வழங்கியவர் என்ற காரணத்தால் சிறிலங்காவில் தொடர்ந்து மிகுந்த செல்வாக்குடையவராக விளங்கும் ராஜபக்ச சீனாவுக்கு மிகவும் நெருக்கமானவராக நோக்கப்படுகிறார்.

கடந்த மாதம் இந்திய உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அவர் புதுடெல்லிக்கு பயணம் செய்திருந்தார் என்றபோதிலும் விக்கிரமசிங்கவே இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறார்.

ராஜபக்சவின் மீள்வருகை அயல்நாடுகளில் செல்வாக்கைச் செலுத்துவதற்காக சீனாவுடன் இந்தியா கடுமையான போட்டியில் ஈடுபட்டிருக்கும் ஒரு நேரத்தில் பீஜிங்கிற்கும் சிறிலங்காவுக்கும் இடையேயான உறவுகள் மேலும் நெருக்கமடைய வழிவகுக்கலாம்.

” கடன்பொறி” யொன்றுக்குள் சிறிலங்கா ஆழமாக விழுந்து விடக் கூடுமென்ற அச்சத்துக்கு மத்தியிலும் ராஜபக்ச மீண்டும்  முக்கியமான திட்டங்களுக்கு நிதியுதவியைப் பெறுவதற்காக சீனாவை நாடக்கூடும்.கொழும்பு நிலவரங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியதைத் தவிர சிறிலங்கா அரசியல் நெருக்கடி குறித்து உத்தியோகபூர்வமாக இந்தியா இதுவரை பிரதிபலிப்பை வெளிப்படுத்தவில்லை.

சிறிலங்காயின் நிலவரங்களைக் கையாளுகின்ற போது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர்கள் இவ்வருட ஆரம்பத்தில் மாலைதீவில் ஏற்பட்ட  அரசியல் உறுதியின்மையில் இருந்து பெற்ற படிப்பினைகளை மனதிற்கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.

( 29 ஒக்டோபர் 2018 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *