மேலும்

‘றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன

தம்மைக் கொலை செய்யும் சதித் திட்டத்துக்குப் பின்னால், இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவு இருந்தது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் கூறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தன்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்தில் றோவுக்குத் தொடர்பு உள்ளதாக சிறிலங்கா அதிபர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளையும் அமைச்சர் ராஜித சேனாரத்ன நிராகரித்தார்.

படுகொலைச் சதித் திட்ட குற்றச்சாட்டுடன், றோ தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகத் தான், சிறிலங்கா அதிபர் சுட்டிக்காட்டினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது ஊடகச் சந்திப்பில் பங்கேற்றிருந்த இந்திய பெண் ஊடகவியலாளர், சிறிலங்கா அதிபர் சதித் திட்டத்தில் றோவுக்கு தொடர்பு இருப்பதாக, குற்றம்சாட்டினார் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் சிலர் , தனக்கு கூறினர் என்று தெரிவித்தார்.

எனினும், அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, றோ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டவில்லை என்றும், ஆனால், ஏனையவர்கள் என்ன கூறினார்கள் என்பதைத் தான் குறிப்பிட்டார் என்றும் கூறினார்.

அதேவேளை, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் இறங்குதுறையை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய எந்த அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் அமைச்சரவை செயலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கிழக்கு கொள்கலன் இறங்குதுறையை இந்தியாவுக்கு வழங்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

எனினும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை, வலுப்படுத்த வேண்டிய தேவை தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பாகவே கலந்துரையாடியிருந்தார் என்றும் அமைச்சரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *