மேலும்

நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி

சீன அதிபர் சி ஜின்பிங்கின் இலக்கான , 70 இற்கும் மேற்பட்ட நாடுகளில் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், தொடருந்துப் பாதைகள் போன்ற நவீன வர்த்தகக் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கான ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது, அதன் சில அயல்நாடுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களுக்கு அப்பால், சீனா இந்த நாடுகளுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களையும் கைச்சாத்திட்டுள்ளதுடன் சீன அரசாங்கம் மற்றும் வங்கிகளிலிருந்து கடன்களைப் பெற்று புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகளிலும் சீனா கைச்சாத்திட்டுள்ளது.

அண்மையில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த மலேசியப் பிரதமர் மகதீர் முஹமட் சீனாவின் அணை மற்றும் பாதைத் திட்டங்களை மிகப் பலமாக எதிர்த்தமை தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டன. சீனாவின் அணை மற்றும் பாதைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் மேற்கொள்ளப்படவிருந்த கிழக்கு கரையோர தொடருந்து இணைப்பு மற்றும் இரண்டு எரிவாயு குழாய்த்திட்டங்களை மஹதீர் இரத்துச் செய்திருந்தார்.

‘சீனாவானது மலேசியாவை கடன்கார நாடாக மாற்ற விரும்பாது என நான் நம்புகிறேன்’ என சீனாவின் திட்டங்களை இரத்துச் செய்தமைக்கான காரணம் தொடர்பாக மலேசியப் பிரதமர் அண்மையில் வழங்கிய ஊடக மாநாட்டில் விளக்கமளித்திருந்தார். அணை மற்றும் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆழ்நீர்த் திட்டத்தை மலேசியா இரத்துச் செய்திருந்தது.

இதேபோன்று சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தொடருந்து திட்டத்தை பாகிஸ்தானில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் இரத்துச் செய்திருந்தது. மாலைதீவில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர்கள், சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகள் அனைத்தையும் மீளவும் ஆராயவுள்ளதாக உறுதியளித்திருந்தனர்.

சீனாவினால் அபிவிருத்தி செய்யப்பட்ட விமான நிலையத்தின் மூலம் போதியளவு வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், சீனாவிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிக் கொடுப்பதில் சிறிலங்கா பல்வேறு சவால்களைச் சந்தித்த நிலையில், இந்த விமான நிலையத்தை சீனாவிடம் கையளிப்பதாக சிறிலங்கா முன்னர் உறுதியளித்திருந்தது.

சீனாவின் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான நாடுகளில் சீனாவிடம் நெருக்கமான தொடர்பைப் பேணிய அரசாங்கத்தை தேர்தலில் தோற்கடிப்பதற்காக மக்கள் வாக்களித்திருந்தனர். இதன்மூலம் குறித்த நாடுகளில் சீன எதிர்ப்பு அரசாங்கங்கள் புதிதாக பதவியேற்றுக் கொண்டன.

ஆழ்கடல் மூலோபாய கடல்துறைமுகத் திட்டம் உட்பட பல்வேறு பாரிய திட்டங்களை மேற்கொள்வதற்கு சீனாவின் உதவியை நாடிய சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, 2015ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான மைத்திரிபால சிறிசேனவினால் தோற்கடிக்கப்பட்டார்.

புதிதாக சிறிலங்காவில் ஆட்சி அமைத்துக் கொண்ட அரசாங்கம் சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது மட்டுமன்றி, சீனாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களையும் மீளாய்வு செய்தது.

சீன முதலீடுகள் தோல்வியுற்றமை தொடர்பாகவும் இவை நாட்டை கடன் சுமைக்குள் தள்ளியுள்ளமை தொடர்பாகவும் தனது தேர்தல் பரப்புரையின் போது சிறிசேன சுட்டிக்காட்டியிருந்தார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் முஸ்லீம் லீக் கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 60 பில்லியன் பெறுமதியான சீன -பாகிஸ்தான் பொருளாதார நடைபாதைத் திட்டமானது , அண்மையில் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தலில் பாகிஸ்தான் தெஹரீக் ஏ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானால் முக்கியத்துவப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் இவர் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று தற்போது பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். சீனாவுடன் நெருக்கமான நட்பைப் பேணும் ஒரு நாடாக பாகிஸ்தான் விளங்குகின்ற போதிலும், தற்போது பதவியேற்ற பாகிஸ்தானின் புதிய அரசாங்கமானது சீனாவின் தற்போதைய மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.

சீனாவின் கடன்பொறிக்குள் பாகிஸ்தான் உட்பட்டுள்ளதால், CPEC திட்டங்களுக்கு முதலீடு செய்யக் கூடிய புதிய முதலீட்டாளர்களை தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளது. அத்துடன் மிக முக்கிய தொடருந்துத் திட்டத்திற்கான செலவை 6 பில்லியன் டொலரிலிருந்து 4 பில்லியன் டொலராகக் குறைத்துள்ளது.

மலேசியாவில் கடந்த மே மாதம் இடம்பெற்ற தேர்தலில் சீனத் திட்டங்களுக்கு சாதகமாக செயற்பட்ட நஜீப் ரசாக் அரசாங்கத்தை மக்கள் தோல்வியுறச் செய்தனர்.

‘சீனாவின் திட்டங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது. தற்போது முன்னுரிமையானது எமது நாட்டின் கடன்சுமையைக் குறைத்துள்ளது. எம்மால் எமது நாட்டின் கடன்களை மீளச் செலுத்தக் கூடிய சூழல் உருவாகும் வரை இந்த நிலை தொடரும். எதிர்காலத்தில் திட்டச் செலவுகளைக் குறைப்பது தொடர்பாக நாம் ஆராய்வோம்.

நாங்கள் இழப்பீட்டை வழங்க வேண்டியிருந்தால் அவற்றை வழங்க வேண்டும். இது முட்டாள்தனமானது. ஆகவே இத்திட்டங்களிலிருந்து வெளியேறுவதற்கான வழியை நாம் கண்டறிய வேண்டும்’ என மலேசியப் பிரதமர் மஹதீர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கேந்திர முக்கியத்துவ அமைவிடத்தில் அமைந்துள்ள மாலைதீவின் முன்னைய அரசாங்கமான அப்துல்லா யமீன் அரசாங்கமானது சீன முதலீடுகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டமையால் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது. இத்தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கூட்டணி தற்போது மாலைதீவில் நடைபெறும் சீனத் திட்டங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்யவுள்ளதாக அறிவித்த நிலையில் குழாய் பொருத்தும் திட்டமானது தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மாலைதீவின் மொத்த வெளிநாட்டு கடன் தொகையில் 70 சதவீதமானவை சீனாவிடம் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதாக மாலைதீவின் புதிய அரசாங்கம் கண்டறிந்துள்ளது. மாலைதீவின் வீதிகள், பாலங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பாக சீனாவுடன் பல்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டமைக்கு அப்பால், தனது இராணுவத் தளமாகப் பயன்படுத்தும் நோக்கில் மாலைதீவின் பவளத்தீவுகள் சிலவற்றை சீனா கொள்வனவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாடுகள் தாம் சீனாவின் கடன்பொறிக்குள் அகப்பட்டுவிடக் கூடாது என்கின்ற அச்சத்தின் காரணமாகவே சீனாவின் முதலீடுகளை நிராகரிப்பதற்கான பிரதான காரணமாகும். அத்துடன் சீனாவின் நிதி சார் கோட்பாடுகளும் நிபந்தனைகளும் மிகவும் கடும்போக்காகவும் அநீதியானதாகவும் காணப்படுகின்றன.

நாடுகளில் முதலீடுகளை மேற்கொள்வதாகவும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதாகவும் சீனா வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் தன்னிடம் கடன்களைப் பெற்றுக் கொள்ளும் நாடுகளுடன் நீதிக்கு மாறான உடன்படிக்கைகளை மேற்கொள்வதுடன் உயர் வட்டி வீதத்தையும் அறவிடுவதால் இந்த நாடுகள் கடன் சுமைக்குள் தள்ளப்படுகின்றன.

‘புதிய கொலனித்துவம் இடம்பெறக் கூடிய சூழல் உருவாகுவதை நீங்கள் விரும்பக் கூடாது. ஏனெனில் இதன்மூலம் திறந்த, சுதந்திரமான வர்த்தக நியமங்களின் அடிப்படையில் பணக்கார நாடுகளுடன் வறிய நாடுகள் போட்டியிடக் கூடிய இயலுமைக் கொண்டிருக்கவில்லை’ என மலேசியப் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

வழிமூலம்        – millennium post (ஆசிரியர் கருத்து)
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *