மேலும்

இரண்டு நாட்களில் மீண்டும் சந்தித்த மகிந்த – மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், இரண்டாவது தடவையாக நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர் என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றின் அரசியல் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

பரந்தளவிலான இடைக்கால கூட்டணி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான இரகசியப் பேச்சுக்களை நடத்திய இரண்டு நாட்களின் பின்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

நீர்கொழும்பில் உள்ள  luxury Grandeeza விடுதியில் ஒரு திருமண நிகழ்விலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

அப்போது, விடயங்கள் தவறாகி விட்டன இல்லையா, என்று மைத்திரிபால சிறிசேனவை மகிந்த ராஜபக்ச புன்னகையுடன் வரவேற்றார். அதற்கு மைத்திரிபால சிறிசேனவும்,அப்படித் தான் என்று கூறினார்.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மீரிகம அமைப்பாளர் சஞ்சய சிறிவர்த்தனவின் மகளுக்கும்,  மகிந்த ராஜபக்சவை நிழல் தலைவராக கொண்ட சிறிலங்கா பொதுஜன முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் சந்தியா சிறிவர்த்தனவின் மகனுக்குமே திருமணம் இடம்பெற்றது.

இந்த திருமணத்துக்கு  வேடர் சமூகத்தின் தலைவர் உருவரிகே வன்னிலா அத்தோவும் அழைக்கப்பட்டிருந்தார். முதன்மை மேசையில் அவருக்கும் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. 

மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாவலர்களின் கவனம், வேடுவர் தலைவரின் மீதே இருந்தது. அவர் பாரம்பரிய முறைப்படி தனது தோளில் கோடரியை கொளுவியிருந்தார்.

இதனால், அவரையே அதிபர் பாதுகாப்புப் பிரிவினர் கண்காணித்தபடி இருந்தனர்  என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *