நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி
உலகில் அரசியல் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் அரசுகள் தமது செல்வாக்கை பலப்படுத்தும் முகமாக பல்வேறு இதர அரசுகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வது சர்வதேச அரசியலில் ஒரு முக்கியமான அங்கமாக பார்த்து கொள்ளப்படுகிறது.
இத்தகைய கூட்டுகள் அரசுககள் மத்தியில் ஏற்படக் கூடிய புரிந்துணர்வுகளின் அடிப்படையிலும், அரசுகள் ஒன்றுடன் ஒன்று மேவும் தன்மையும் உள்ள இடங்களில், தமது நலன்களை அடிப்படையாக வைத்து பிரதானமாக செய்து கொள்ளப்படுகிறது.
கூட்டுகளில் பாத்திரம் வகிக்கும் அரசுகள் தம்மத்தியிலே உள்ள நடத்தைகளை ஒழுங்கமைப்பு செய்து கொள்ள வேண்டியதன் தேவையை உணர்ந்து, பொதுவான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக குறிப்பிட்ட ஒழுங்கு விதிகளை ஏற்படுத்திக் கொள்வதுடன் பொது சித்தாந்த நெறிமுறைகளின் அடிப்படையில் அல்லது ஒப்பந்தங்களின் அடிப்படையில் இத்தகைய கூட்டுகள்அமைத்துக் கொள்ளப்படுகிறது.
பங்களிக்கும் அரசுகளின் பொதுவான நலன்களே கூட்டுகளில் அதிகம் வலியுறுத்தப்படுகிறது என்ற வகையில், தற்காலசர்வதேச அரசியல் நிலைமைக்கு ஏற்ற வகையில் தனது ஏகாதிபத்தியத்தை வெளிப்படுத்தும் முகமாக செயற்படுகின்றன.
ஏகாதிபத்திய வல்லரசுகள் பொதுவான சட்டதிட்டங்களை தமக்கு மத்தியில் உருவாக்கிக் கொள்வதுடன் தமது வியாக்கியானங்களை அல்லது நலன்களை முன்நிறுத்தும் வகையில் செயல்படுகின்றன.
இந்தவகையில் ஆசிய- பசுபிக் சனநாயக வல்லரசு நாடுகளான யப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகியன அமெரிக்காவுடன் இணைந்து நாற்கர கூட்டு (Quadrilateral regime ) ஒன்றை தமது பொதுநலன்களை மையமாகக் கொண்டு உருவாக்கி நடத்தின வருகின்றன. இந்த பொதுவான நலன் கூட்டு சீனாவின் அதீத வளர்ச்சியை கரிசனையாக கொண்டது.
பொருளாதார ரீதியாக சீனா முனைப்புடன் வளர்ந்துவரும் தன்மையானது ஜப்பானிய உற்பத்தி பொருளாதாரத்திற்கும் , இந்திய உற்பத்திச் சந்தைப்படுத்தலுக்கும் அவுஸ்திரேலிய பொருளாதார வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் தடையாக இருப்பதாக கருதப்படுகிறது. இவை எல்லாவற்றிகும் மேலாக அமெரிக்க சர்வதேச மேலாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
தென்சீன கடற்பகுதியில் சீனா தனது பிராந்திய ஆதிக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. இதனால் நான்கு நாடுகளின் கூட்டில் தாராளவாதம் என்ற பொதுக்கருத்து இருக்கிறது. மேலும்சுதந்திரமான, திறந்த இந்தோ-பசுபிக் என்ற பொதுக்கருத்து உடன்பாடும் எழுந்துள்ளது.
கடல் ரோந்து பணிகளை அதிகரித்தல், புதிய கடல்சார் நிலையங்களை அமைத்தல், மீனவர்களை பரிசோதித்தல், அவர்கள் படகுகளை நாசம் செய்தல், அவுஸ்திரேலியா, யப்பான் நாட்டு வர்த்தக கப்பல்களை, கடற்போக்குவரத்துகளை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளில் அதிகரித்த தன்னிச்சைத்தனம் காட்டிவருவதாக இந்த நான்கு தாராளவாத நாடுகளும் கூட்டாக குற்றம்சாட்டுகின்றன.
அதேபோல தெற்காசியப் பிராந்தியத்திலும் தென்சீன கடலிலும் பொருளாதார மூச்சுத்திணறல்களை ஏற்படுத்தவல்ல ஒடுங்கிய கடற்பாதைகளில் கப்பற்தளங்களை அமைத்தல் . சமிக்ஞை நிலையங்களை அமைத்தல் என சீன கடல்சார் விரிவாக்கம் அதிகரித்து வருவதாக இந்திய அமெரிக்க அரசுகள் குற்றம்சாட்டுகின்றன.
இதனால் இந்த நான்கு பிரதான வல்லரசுகளும் பொதுக் கருத்து உடன்பாட்டின் அடிப்படையில் ஏழு முக்கிய விடயங்கள் கவனத்தில் கொள்கின்றன. அவை வருமாறு-
- விதிசார் ஒழுங்கு – இந்தோ-பசுபிக் கரை நாடுகள் சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளுதல் வலியுறுத்தப்படுகிறது.
- கடல்வழி – வழிநடத்தல் சுதந்திரமும் ஆகாயவெளி – வழிநடத்தல் சுதந்திரமும் இருத்தல் வேண்டும்.
- சர்வதேச சட்டங்களை மதித்து நடந்து கொள்ளுதல் வேண்டும் .
- தொடர்பு சார்ந்து இருத்தல் – பிராந்தியங்களின் திடமான அரசியல் நிலையும் , செழிமையும் பிராந்தியங்களுக்கு இடையிலான தொடர்புகளின் பலனாகவே உள்ளது. தொடர்புகள் பல்வேறு தரவுகளையும் பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் அவசியமானதாக கணிப்பிடப்படுகிறது.
- கடல்சார் பாதுகாப்பு சார்ந்து இருத்தல்.
- வடகொரியா குறித்த அணுஆயுத கட்டுப்பாடு விடயத்தில் ஒருமித்த கொள்கையை கொண்டிருத்தல்.
- பயங்கரவாதம் தொடர்புடையது – பயங்கரவாதத்திற்கு எதிரான விடயங்களில் ஒருங்கிசைவுடன் செயற்படுதல்.
என இந்த நாற்கர கூட்டு நாடுகள் தமது பிரதான பொது உடன்பாட்டில் இணக்கம் கொண்டுள்ளன.
இங்கே எந்த வகையிலும் இந்த கூட்டு சீனாவுக்கு எதிரான போக்கு கொண்டிருப்பதை குறிப்பிடவில்லை. ஆனால் சீனாவினால் இந்த கூட்டு தனக்கு எதிரான போக்கு கொண்டதானதாக உணரப்பட்டுள்ளது.
சீனா தன்னை தவிர்த்து தனது பிராந்தியத்தை மையமாக கொண்டு சாத்தியமான மூலோபாய நகர்வுகளில் இந்த நான்கு நாடுகளும் இறங்குவதை அவதானிப்பதே அந்த அரசியல் அசௌகரியத்திற்கு காரணமாகும்.
2007ஆம்ஆண்டிலேயே அமெரிக்க தலைமையை மையமாக வைத்து இந்த கூட்டுஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போதைய அமெரிக்கத் தலைமை சர்வதேச ஆளுமையில் முதற் கவனம் கொண்டிராத தன்மை உள்ளது.
ஆனால், வெளிப்படையாக அமெரிக்கா முதன்மை என்ற போக்கில் வியாபார நலன்களையே நோக்கமாக கொண்டு சர்வதேச அரசியலை நடத்தும் போக்கு கொண்டதாக இன்றைய அமெரிக்கத் தலைமை உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலை அமெரிக்காவுக்கு எழக்கூடிய செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தாராள சனநாயகவாத போக்கை பின்தள்ளி விடக்கூடிய கட்டத்திற்கு வந்துள்ளது. என்பது பல்வேறு இதர தாராள பொருளாதாரத்தை கடைப்பிடிக்கும் நாடுகளினதும் பார்வையாக உள்ளது.
“தற்போதைய நிலையில் அமெரிக்கா சர்வதேச ஒழுங்கு நிலையை வலுவிழக்க செய்கிறது. சீனாவுடன் நேரடி வணிக யுத்தத்தை அதிகமாக்கி உள்ளது. நேட்டோ நாடுகளின் கூட்டு அமைப்பை பயமுறுத்தி வருகிறது. அதேவேளை, சீனாவும் ரஷ்யாவும் கூட்டாக இணைந்து செயற்படுவதுடன், மேலைத்தேய எதிர்ப்போக்குகளில் அதிக தன்னிச்சையான செயற்பாடுகளில் இறங்கி உள்ளன.
இவை அனைத்தும் ஒரேநேரத்தில் நிகழ்வதால் மேலைத்தேய நாடுகளின் சனநாயகம் கவனச்சிதறலை எதிர்நோக்கி உள்ளதாக அவுஸ்ரேலிய மூலோபாய ஆய்வு அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவின் பார்வையில் தேவையற்ற வகையில் சீனாவை சீண்டுவதாக இந்த நாற்கர கூட்டு அமைப்பு உள்ளது என்ற நிலைப்பாடு இருந்தது. இருந்தபோதிலும் அவுஸ்ரேலியாவின் உள்நாட்டு அரசியல் ஆட்சிமாற்றத்தின் பின் தென்சீன பசுபிக் பிராந்தியதில் சீன நடவடிக்கைகளில் அதிகம் அக்கறை கொண்ட புதிய அவுஸ்ரேலிய அரசு நாற்கரகூட்டில் இணைந்து கொண்டுள்ளது.
அடுத்ததாக, இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்தியா முனைகிறது. இதனால் நாற்கர கூட்டு நாடுகளில் ஒன்றான அவுஸ்ரேலியா தனது பிராந்தியத்தில் செல்வாக்கு பெறுவதை விரும்பவில்லை.
அண்மையில் மலபார் கடலில் அமெரிக்க , யப்பானிய, இந்திய கடற்படைகள் போர்ஒத்திகை நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இந்த ஒத்திகைகளில் அவுஸ்ரேலியாவும் பங்குபற்ற கேட்ட பொழுது இந்தியா அதன் பங்களிப்பை அனுமதிக்க மறுத்துவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா, அவுஸ்ரேலியாவின் இந்துமா கடல் பயிற்சிகளை மறுத்து வருகிறது.
அதேவேளை, இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இந்திய-சீன பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. சீனத்தலைவர் ஷி ஜின்பின் அவர்களின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் மோடிஅவர்கள் சீனா சென்றிருந்தார். சீனாவின் வுகான் என்னும் நகரத்தில் இவ்விரு தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் பின் மோடி அவர்கள் நாற்கரக்கூட்டில் அதிகம் நாட்டம் காட்டவில்லை என்பது அனுபவம் மிகுந்த அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் பார்வையாக உள்ளது. சீனத் தலைவருடனான சந்திப்பின் பின் இந்தியா அமெரிக்காவுடன் செவிட்டு இராசதந்திரத்தை கையாள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பார்வையில் இந்திய- சீன தலைவர்களின் சந்திப்பின் பின்பும் எந்த ஒரு பொது உடன்பாட்டு அறிக்கையும் வெளியிடாத நிலையானது அவர்களுடைய வேறுபாடுகள் இன்னமும் இருப்பதாகவே கோடிட்டுக் காட்டுவதாக பார்க்கின்றனர். இருந்தபோதிலும் அவர்கள் கூட்டாக செயல்படுவதற்கு ஒத்திசைந்திருப்பதுவும் தெரிவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்து இந்தியாவின் நாற்கரகூட்டில் நாட்டமற்ற அறிகுறிகளை காட்டியது நரேந்திர மோடி அவர்களின் சிங்கப்பூர்-இவ்வருட சங்கிரிலா மாநாட்டு பேச்சாகும். அந்த கூட்டத்தில் மோடி அவர்கள் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டிருந்தார். அந்தபேச்சிலேஇந்தோ- பசுபிக் பிராந்தியம் ஒரு மூலோபாயமாக அல்லது வரையறுக்கப்பட்ட நாடுகளின் ஒரு சங்கமாக தாம் பார்க்கவில்லை என்று பேசி இருந்தார்.
மேலும் சீனாவின் இராணுவ வளர்ச்சி தென்சீன கடற்பகுதியில் அதனுடைய தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்து எந்தவித விமர்சனத்தையும் தெரிவிக்காது தவிர்த்து கொண்ட நிலையையும் அமெரிக்க ஆய்வாளர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர்.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியா தனது முதன்மையை பேணும் வகையில் செயற்படுவதாக இருந்தாலும் அதனுடைய அடிப்படை வெளியுறவுக் கொள்கையான அணிசேராமையை விட்டுவிலகும் என்றும் எதிர்பார்க்க முடியாது. என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தநிலை ஒரு ஊசலாடும் வெளியுறவுக் கொள்கை ஒன்றுடன் இந்தியா வல்லரசுகளை கையாளும் தன்மையை எதிர்பார்ப்பதாக அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஆக, நாற்கரகூட்டு மூலோபாயம் அமெரிக்கத் தரப்பில் மிகவும் வலிமை மிக்கதாக கருதப்படவில்லை. மேலும் தற்போதைய அமெரிக்கத் தலைமையின் செயற்பாடுகள் இந்த கூட்டை மேலும் வலுவானதாக ஆக்கும் என்பதில் எவரும் உறுதியான கூறவில்லை.
அமெரிக்காவில் அரசியல் மாற்றம் ஏற்படும் வரை இந்தோ-பசுபிக் பிராந்தியம் கடுமையான நிலைக்குதள்ளப்படும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கவில்லை.
-லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி.