துமிந்த சில்வாவின் தூக்கு உறுதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
2011ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த கொழும்பு மேல்நீதிமன்றம், 2016ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட நான்கு பேருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரணதண்டனையை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் முதலாவது எதிரியை விடுதலை செய்து உத்தரவிட்டது.