மேலும்

பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் – இன்று அமைச்சரவையில்

பலாலி விமான நிலையத்தை, சிறிலங்கா விமானப்படையும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையும் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் செயலர் விதானகமகே தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு, சுற்றுலா அமைச்சு, கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து, 2 பில்லியன் ரூபா செலவில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக, அபிவிருத்தி செய்வதற்கான இந்த திட்டத்தை, முன்வைக்கவுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி நிதியம், ஆகியவற்றின் நிதி முதலீட்டில், பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும், சிறிலங்கா விமானப்படை அபிவிருத்தி வேலையை மேற்கொள்ளும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் நிமலசிறி தெரிவித்தார்.

“பல்வேறு வகையான விமானங்களைத் தரையிறக்கக் கூடிய வகையில், பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும். எனினும், ஏ-320 விமானமே எமது மாதிரியாக உள்ளது.

பலாலி விமான நிலையத்துக்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும் என்று இப்போதே கணிக்க முடியாது. ஆனால், சுற்றுலாத் துறையினரிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டால், வடக்கு, கிழக்கு வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் பயனடைய முடியும்.

பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டதும், அதனை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையே முகாமைத்துவம் செய்யும். கட்டுநாயக்க விமான நிலையத்தில், உள்ளதைப் போன்று, விமானப்படையும் நிலைகொண்டிருக்கும்.

சாதாரண பயணிகளைக் கையாளுவதற்குத் தனியான பிரிவு, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் செயற்படும்.  இராணுவப் பிரிவை சிறிலங்கா விமானப்படை முகாமைத்துவம் செய்யும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை மூன்று மாதங்களுக்குள் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு  உடன்பாடு ஒன்றில், இந்திய வெளிவிவகார அமைச்சும் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையும் அண்மையில்  கையெழுத்திட்டிருந்தன.

எனினும், வேறெந்த நாட்டுக்கும் பலாலி விமான நிலைய புனரமைப்பு வேலைகள் ஒப்படைக்கப்படாது என்று சிறிலங்காவின் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாடி  டி சில்வா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *