மேலும்

புலிகளின் வெடிபொருட்களுடன் ஒட்டுசுட்டானில் நால்வர் கைது

முல்லைத்தீவு – பேராறு பகுதியில் வெடிபொருட்கள், புலிகளின் சீருடை, கொடி என்பனவற்றுடன் கைது செய்யப்பட்டவர்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டுசுட்டான்- புதுக்குடியிருப்பு வீதியில் உள்ள பேராறு பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ரோந்து சென்ற இரண்டு சிறிலங்கா காவல்துறையினர், முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனையிட்டனர்.

அப்போது, அதிலிருந்த ஒருவர் தப்பியோடினார். அவர் கையை இழந்த முன்னாள் போராளி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் முச்சக்கர வண்டியில் இருந்து கப்டன் பவான் (ஐயா) ரகத்தைச் சேர்ந்த 15 கிலோ எடையுள்ள தகர்ப்புக் குண்டு, டெட்டனேற்றர்கள், தொலைவுக் கட்டுப்பாட்டு கருவிகள், ரி-56 ரவைகள், கைக்குண்டுகள். விடுதலைப் புலிகளின் கொடிகள், சீருடைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

அந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் போது. முச்சக்கர வண்டி சாரதி தனக்கு ஏதும் தெரியாது என்றும், தப்பியோடிய நபரே வாடகைக்கு அமர்த்தி வந்தார் என்றும் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட மற்றைய நபர், விசாரணைகளின் போது வெடிபொருட்கள் குறித்து தப்பியோடியவருக்கே தெரியும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இவர்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், தப்பியோடியவரைக் கைது செய்ய ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் நேற்று சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர், இராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், தப்பியோடிய நபரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.

கைது செய்யப்பட்ட நால்வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், ஏற்கனவே காணாமல் போனவர் என்று காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டவர் என்றும், அவர் வேறு பெயர் ஒன்றில் செயற்பட்டு வந்திருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடைய மேலும் பலரும் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும், கிளிநொச்சியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நான்கு உந்துருளிகள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவங்களால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்கள் மத்தியிலும், முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் மத்தியிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *