மேலும்

மயிலிட்டியில் கப்பலில் பற்றிய தீ – கடற்படை தீவிர விசாரணை

காங்கேசன்துறை – மயிலிட்டி இறங்குதுறைக்கு அருகே தரை தட்டி நிற்கும் கப்பலில் ஏற்பட்ட தீ நேற்று நண்பகலுக்குப் பின்னர் முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் தினேஸ் பண்டார,

மயிலிட்டி இறங்குதுறைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா கடற்படையினர் உடனடியாக இறங்கினர்.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தீ பரவ ஆரம்பித்தது. உடனடியாகவே தீயை அணைப்பதற்கு சிறிலங்கா கடற்படை அணிகளை அனுப்பியது.

HIND- M என்ற பெயர் கொண்ட இந்தக் கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்ட நிலையில்  மயிலிட்டி துறைமுகத்துக்கு அருகே பாறைகளுக்குள் சிக்கி தரை தட்டி நின்றது.

கடந்த ஜனவரி மாத்த்தில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இந்தக் கப்பல் காணப்பட்டது.

இது பகவான் மரைன் முகாமைத்துவ நிறுவனத்துக்குச் சொந்தமானது.பாரத் சிப்பிங் லைன் இதன் முகவர் நிறுவனமாகும்.

இந்தியாவில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு  சீமெந்து ஏற்றி வர இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கப்பலில் தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து காங்கேசன்துறை காவல்துறையினருடன் இணைந்து சிறிலங்கா கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று நண்பகல் கப்பலில் ஏற்பட்ட தீ முற்றாக அணைக்கப்பட்டது. எனினும், துறைமுகப் பகுதியில் தீயணைப்பு வாகனம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *