மேலும்

அதிகாரத்துக்குப் போட்டியிடும் சிங்களக் கட்சிகளும் பிரச்சினைகளோடு போராடும் சிறுபான்மையினரும்

mahindaஇவ்வாண்டு தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய இனப்பிரப்பிரச்சினை நிலவுகின்ற சிறிலங்காவில், வன்முறைகள் நிறைந்த தேர்தல்கள் இடம்பெறும். பெப்ரவரி 10 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் சிறிலங்காவின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது.

இத்தேர்தலில் 75 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றதானது மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காண்பித்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது.

தற்போதைய அரசாங்கமானது புதிய தேர்தல் முறைமைக்கான வன்முறைகளற்ற வாக்களிப்பிற்கு பங்காற்றியுள்ளது.

‘முன்னைய தேர்தல்களில் இடம்பெறும் போட்டிமிக்க மற்றும் முரண்பாடான விருப்பு வாக்கு முறைமையானது நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறைமையில் காணப்படாமையே தற்போது இடம்பெற்ற தேர்தல் மிகவும் அமைதியான தேர்தலாக இடம்பெறுவதற்குக் காரணமாகும்’ என  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படுவதானது வருகின்ற பொதுத் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்திற்கு நலன் பயக்கும் என விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

1983 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் உள்நாட்டு யுத்தத்தால் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்ட சிறிலங்காவில் வன்முறைகளற்ற தேர்தல் இடம்பெற்றதானது உண்மையில் வரவேற்கத்தக்கதாகும். எனினும், உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தற்போது ஆட்சியிலுள்ள கட்சிகளுக்கு சாதகமாக காணப்படவில்லை.

உள்ளூராட்சித் தேர்தல் என்பது நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்களைப் போன்ற பாரியதொரு தாக்கத்தை சிறிலங்காவில் ஏற்படுத்துவதில்லை எனினும் இம்மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதானது, அவர் மிக விரைவாக மீண்டும் அரசியலில் முன்னிலைக்கு வந்துள்ளார் என்பதையும் அரசியல் அதிகாரத்தை மீளப்பெறுவதற்கான சாத்தியத்தைக் கொண்டுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

20115ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன 51 சதவீத வாக்குகளைப் பெற்றமையால் ராஜபக்ச தோல்வியுற்றார். சிறிலங்காவில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகத்தினர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்குத் துணைநின்றனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிசேன 2015 இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டார். 2015 தொடக்கம் சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.

ராஜபக்ச ஆட்சியிலிருந்த போது இவர் மீது பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச ஒருபோதும் தனது பிரபலத்தை இழக்கவில்லை.

ராஜபக்ச தனது முன்னைய கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார். தற்போது இவர் தனது சகோதரர்கள் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னைய உறுப்பினர்களின் ஆதரவுடன் சிறிலங்கா பொதுஜன முன்னணி என்கின்ற கட்சியின் தலைவராக உள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெற்றதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் மீது ராஜபக்ச பழிக்குப் பழி வாங்கியுள்ளார் என்பதை உணரமுடிகிறது.

உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெற்றதன் பின்னர், தற்போதைய அரசாங்கமானது நாடாளுமன்றைக் கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என ராஜபக்ச அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இவரது இந்தப் பின்னணியானது, ராஜபக்ச இந்த நாட்டின் அரசியல் தலைவராக மீண்டும் வருவதற்கான தனது விருப்பை ஒருபோதும் கைவிடவில்லை என்பதைக் காண்பிக்கின்றது. அத்துடன் தனது கட்சி ஆதரவாளர்களிடம் வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் ‘அவர்கள் எமக்கு என்ன செய்தாலும் பிரச்சினையில்லை, நாங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்’ எனவும் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

mahinda

பெரும்பான்மை சிங்கள கட்சிகளுக்கு வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகள் தெளிவாகச் சுட்டி நிற்கின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் வெற்றி பெற்றுள்ளது.

உள்நாட்டுப் போர் இடம்பெற்ற போது வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் செயற்பட்டனர். தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாவிட்டாலும் கூட அவர்களது எண்ணங்கள் இன்றும் வடக்கில் காணப்படுகின்றன.

தமிழ் சமூகமானது மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதாக சித்திரவதைகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு குடியேற்றங்கள் இடம்பெறுவதும் மிகப்பாரியதொரு பிரச்சினையாகக் காணப்படுகிறது.

இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் நிலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் அபகரித்துள்ளதுடன் இதில் தமது சொந்த நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளனர். ஆகவே இது முன்னைய அரசாங்கத்தால் ஏற்பட்ட பிரச்சினை எனினும் தமிழ் மக்கள் தற்போதைய சிங்களத் தலைமை மீதும் நம்பிக்கை வைக்க முடியாதவர்களாக உள்ளனர்.

இதேபோன்று முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளன. 2013ல் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் உரையாடும் போது இதனை நான் உறுதிப்படுத்தினேன். தனது சமூகத்தைப் பொறுத்தளவில் காணி அபகரிப்பு என்பது மிகவும் முக்கியமானதொரு கேள்வியாக உள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவுடன் இயங்கிய கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேன, முஸ்லீம் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருப்பதுடன், சிறிலங்காவானது பௌத்தர்களுக்கான புனித நிலம் எனவும் பரப்புரை செய்துவருகிறது.

2020ல் அடுத்த அதிபர் தேர்தல் இடம்பெறவுள்ளது. ஆனால் இத்தேர்தலில் தற்போதைய அரசியல் சீர்திருத்தத்தின் படி, மகிந்த ராஜபக்ச அதிபர் வேட்பாளராகப் போட்டியிட முடியாது. ஆனால் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் தான் மக்கள் மத்தியில் எத்தகைய பிரபலத்தையும் ஆதரவையும் கொண்டுள்ளார் என்பதை மகிந்த ராஜபக்ச காண்பித்துள்ளார். ஆகவே இதன்மூலம் மகிந்தவின் சகோதரர்களில் ஒருவர் அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவார்.

ஐக்கிய தேசியக் கட்சி சிறிசேனவிற்கான தனது ஆதரவை விலக்கி தனது கட்சி வேட்பாளர் ஒருவரை அதிபர் தேர்தலில் நிறுத்தலாம்.

ஆகவே 2020ல் சிறிசேன இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

பிரதான சிங்களக் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு போட்டியிடும் அதேவேளையில், சிறிலங்காவில் வாழும் இரு சிறுபான்மை சமூகங்களும் தத்தமது பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.

ஆங்கிலத்தில் – ANDREAS JOHANSSON
வழிமூலம்       – Open Democracy
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *