மேலும்

பிரிகேடியர் பிரியங்கவின் இராஜதந்திர சிறப்புரிமை பறிக்கப்படுமா?

Brigadier Priyanka Fernandoபிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, இராஜதந்திர சிறப்புரிமையை இழக்கும் ஆபத்தில் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 4ஆம் நாள் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கி அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பிரித்தானியாவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முதலில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பணி இடைநிறுத்தம் செய்திருந்தது. எனினும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதனை ரத்துச் செய்ததுடன், அவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளவும் உத்தரவிட்டார்.

நேற்று இந்த உத்தரவு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் ஊடாக, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்த விவகாரத்தை சிறிலங்கா அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத போதிலும், பிரித்தானியா இதனைப் பாரதூரமான விடயமாக எடுத்துக் கொண்டுள்ளதாக தோன்றுகிறது.

பிரித்தானிய காவல்துறையின் விசாரணைகளில், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ தவறிழைத்தது கண்டறியப்பட்டால், பிரித்தானிய அரசாங்கம் அவரது  இராஜதந்திர சிறப்புரிமையை விலக்கிக் கொள்ளும் சாத்தியங்கள் உள்ளன.

இராஜதந்திர உறவுகள் தொடர்பாக வியன்னா உடன்பாட்டின் படி, அனுப்பும் நாடு ஒன்றினது, இராஜதந்திரிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் முடிவை பெறும் நாடு எடுக்க முடியும்.

எனினும், அனைத்துலுக சட்டங்கள் தொடர்பான உள்நாட்டு நிபுணர்கள், அவ்வாறு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ வெளியேற்றப்படுவதற்கு சாத்தியங்கள் குறைவு என்று கூறியுள்ளனர்.

“பிரித்தானியாவில் வேண்டப்படாத நபராக அறிவிக்கப்பட்டே, இராஜதந்திர சிறப்புரிமைகளை நீக்கி நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.

வியன்னா பிரகடனத்தின் படி, அவ்வாறு வேண்டப்படாத நபராக அறிவிப்பதற்கு, குறித்த இராஜதந்திரி, மோசமான குற்றமிழைத்தவராக அல்லது, பெறும் நாட்டின் உள் விவகாரங்களில் தேவையற்ற தலையீடு செய்தவராக இருக்க வேண்டும்.

எனினும், இந்த விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கம், பிரிகேடியர் பிரியங்கவை அவ்வாறு வேண்டப்படாத நபராக பிரகடனம் செய்வதற்கு வாய்ப்பில்லை என்று  சட்ட நிபுணர் நைஜெல் கீத் ஹட்ச் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *