மேலும்

சுதந்திர நாள் வரவேற்பு விருந்தை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர்

maithri-mobileஇன்று கொண்டாடப்படும் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் வரவேற்பு விருந்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்துள்ளார்.

சுதந்திர நாளன்று பாரம்பரிய முறைப்படி, சிறிலங்கா அதிபரால் இராப்போசன  வரவேற்பு விருந்து ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள், இராஜதந்திரிகள் பங்கேற்பது வழக்கம்.

இம்முறையும், இந்த விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. சுமார் 600 விருந்தினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், அழைப்பிதழ் அனுப்பப்பட்ட வெளிநாட்டு தூதுவர்கள், மற்றும் இராஜதந்திரிகள், பிரமுகர்களுக்கு இந்த விருந்துபசார நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு இன்னமும் நான்கு நாட்களே இருப்பதால், பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே, சுதந்திர நாள் இராப்போசன வரவேற்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா அதிபரின் உத்தரவை அடுத்தே இந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே அழைப்பிதழ் கிடைத்த பலர், தமக்கு நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பான அறிவித்தல் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *