டக்ளசுக்கு எதிரான சாட்சியங்களை முன்னிலைப்படுத்த தவறிய காவல்துறை அதிகாரிக்கு பிடியாணை
சூளைமேடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஈபிடிபி செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்களுக்கு எதிராக, சாட்சிகளையும், சான்றுகளையும் முன்னிலைப்படுத்தத் தவறிய காவல்துறை அதிகாரிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
1986ஆம் ஆண்டு சென்னை- சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாகினர்.
அதன் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்த வழக்கு, மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த டக்ளஸ் தேவானந்தா, காணொளி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாக இணங்கியுள்ளார்.
அதேவேளை, இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த சூளைமேடு காவல் நிலைய அதிகாரி இணங்கியிருந்தார்.
எனினும், நேற்று நடந்த விசாரணையில், சாட்சிகளையும், சான்றுகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாததால், சூளைமேடு காவல்நிலைய ஆய்வாளருக்கு எதிராக நீதிவான், பிணையில் வெளிவரக் கூடிய பிடியாணையைப் பிறப்பித்துள்ளார்.