மேலும்

நியூயோர்க்கில் எதிர்பார்த்த முக்கிய சந்திப்புகள் கைகூடாமல் நாடு திரும்பினார் சிறிலங்கா அதிபர்

maithriஎதிர்பார்த்தபடி முக்கிய சந்திப்புகள் கைகூடாமலேயே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க நியூயோர்க் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுக்காலை கொழும்பு திரும்பினார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் முக்கிய உலகத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு மைத்திரிபால சிறிசேன விருப்பம் கொண்டிருந்தார்.

எனினும் கொழும்பில் இருந்து புறப்படும் முன்னர், உறுதிப்படுத்தப்பட்ட, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதமர்களுடனான சந்திப்புகள்  மாத்திரம் இடம்பெற்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கல், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்டவர்களைச் சந்திப்பதற்கு சிறிலங்கா அதிபர் விருப்பம் கொண்டிருந்தார்.

இந்தச் சந்திப்புகள் நடப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கூறியிருந்தனர்.

எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கல், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்தியா சார்பில் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜும், சீனா சார்பில், வெளிவிவகார அமைச்சர் வாங் யியும், ஜேர்மனி சார்பில், உதவி அதிபர் சிக்மர் கபிரியேலுமே கலந்து கொண்டனர். இதனால் இந்த நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமல் போனது.

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே நியூயோர்க்கிற்கு வந்திருந்த போதும், சிறிலங்கா அதிபரைச் சந்திக்க அவர் நேரம் ஒதுக்கவில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தும் வாய்ப்பும் சிறிலங்கா அதிபருக்கு கிடைக்கவில்லை.

எனினும், உலகத் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் அளித்த வரவேற்பு உபசாரத்தின் போது, அமெரிக்க- சிறிலங்கா அதிபர்கள் தமது துணையர்களுடன் இணைந்து ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் மாத்திரம் சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அதேவேளை, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் ஆகியோர் சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *