மேலும்

சிறிலங்காவில் அமெரிக்க விமானப்படை நடத்தும் ஒத்திகைப் பயிற்சி – 13 நாடுகள் பங்கேற்கின்றன

The Pacific Airlift Rally 2017 (3)இந்தோ-ஆசிய-பசுபிக் பிராந்திய விமானப்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் ஏற்பாட்டில், The Pacific Airlift Rally 2017 என்ற விமான ஒன்றுகூடல் மற்றும் பயிற்சி சிறிலங்காவில் நடைபெற்று வருகிறது.

நீர்கொழும்பில் உள்ள ஜெட்விங் புளூ விடுதியில் கடந்த 11ஆம் நாள் ஆரம்பமாகிய இந்த ஒன்றுகூடல் மற்றும் பயிற்சி, நாளை வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

மனிதாபிமான உதவி, அனர்த்த நிவாரணம் நடவடிக்கைகளில் பிராந்திய நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அனைத்துலக கருத்தரங்கு, பல்வேறு நாடுகளில் அனர்த்த மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பான நடவடிக்கைகளை ஒரே மேசையின் மீது இருந்து வழிநடத்தும் கட்டளை நிலைய பயிற்சி, அனர்த்த மீட்பு, பாராசூட் தரையிறக்கம், பொதிகள் தரையிறக்கம் போன்றவற்றை உள்ளடக்கிய பறப்புப் பயிற்சி ஒத்திகை, பறந்து கொண்டிருக்கும் சி-130 விமானத்தில் கட்டளை மையப் பயிற்சி என்பனவற்றை உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

கட்டளை மைய பயிற்சிகள் ஜெட்விங் விடுதியிலும், பறப்பு பயிற்சி ஒத்திகை கட்டுநாயக்க விமானப்படைத்தளம் ஆகியவற்றில் இடம்பெற்றன.

The Pacific Airlift Rally 2017 (1)The Pacific Airlift Rally 2017 (2)The Pacific Airlift Rally 2017 (3)

இதில் அமெரிக்கா, இந்தோனேசியா, பங்களாதேஸ், ஜப்பான், லாவோஸ், மலேசியா, மொங்கோலியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அவுஸ்ரேலியா, வியட்னாம், மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளின் விமானப்படை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்தப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்க விமானப்படையின் C-130J இராட்சத விமானங்கள் இரண்டு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளன. இவற்றுடன் இணைந்து, சிறிலங்கா விமானப்படையின் C-130H மற்றும் AN-32 விமானங்கள் நேற்று பறப்புப் பயிற்சி ஒத்திகைகளில் பங்கேற்றன.

இன்று அம்பாறை விமானப்படைத் தளத்தை அண்டிய பகுதியில், அமெரிக்க விமானப்படையின், C-130H விமானத்தில் இருந்து கொமாண்டோக்களை பராசூட்  மூலம் தரையிறக்குதல், மற்றும் பொதிகளை தரையிறக்குதல் பயிற்சிகள் நடத்தப்படவிருந்தன.

எனினும், இன்று வானிலை ஒத்துழைக்காததால், நாளை இந்த தரையிறக்கப்  பயிற்சிகள் அம்பாறையில் நடைபெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *