மேலும்

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

tnaஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை என்பன தொடர்பாக முடிவுகளை எடுப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில், இரா.சம்பந்தன் தலைமையில், இந்த கூட்டம் நடைபெறும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு முன்னதாக,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான  ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கும், ஏனைய பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டவரைவு  மற்றும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை ஆகியன கொள்கை முடிவுடன் தொடர்புபட்டுள்ளன.  எனவே நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கு முன்னதாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டதைக் கூட்டி, பங்காளிக் கட்சிகளின் கருத்தறிந்து முடிவெடுப்பதே சிறந்தது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக்கட்சியான புளொட் தலைவர் சித்தார்த்தனும், இந்த விடயங்கள் தொடர்பாக, முதலில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு எடுப்பதே சிறந்தது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *