மேலும்

“நான் இனவாதியல்ல” – மல்வத்த மகாநாயக்கரிடம் முதலமைச்சர் விக்கி எடுத்துரைப்பு

cm-malwatta (1)மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரை நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்திய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

வடமாகாண முதலைமச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முற்பகல், கண்டியில், மல்வத்த பீடத்தின் பீடாதிபதியான,வண. திப்பொட்டுவாவே சிறி  சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

முதலமைச்சருடன் வடமாகாண அமைச்சர்களான கந்தையா சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகியோரும் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர் ஒருவரும் இந்தச் சந்திப்பில் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது, தான் ஒரு இனவாதியல்ல என்பதை எடுத்துரைத்த வட மாகாண முதலமைச்சர், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்தும், மல்வத்த பீடத்தின் மகாநாயக்கருக்கு, தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் மல்வத்த மகாநாயக்கருக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், தெளிவுபடுத்தினார்.

cm-malwatta (1)

cm-malwatta (2)

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், போர் காரணமாகவே வடக்கிலும், கிழக்கிலும் கணவனை இழந்த, வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டதனால், பெண்கள் பெரும் எண்ணிக்கையான பெண்கள் குடும்பங்களுக்குத் தலைமைதாங்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

வடக்கிலும் கிழக்கிலும் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதையும் அவர் மல்வத்த மகாநாயக்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.

தனது மூன்று குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த அமைச்சர் அனந்தி சசிதரன், தனது கணவர் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பதாகவும், அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து தனது பிள்ளைகள் நித்தம் தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், நேற்று பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளைச் சந்தித்தனர்.

அதேவேளை, இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் குழுவினர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

* உள்ளடக்கம் மற்றும் படங்கள் – பிபிசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *