மேலும்

ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மீது கொலம்பியா, பிரேசிலில் போர்க்குற்ற வழக்குத் தாக்கல்

general jegath-jeyasooryaசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பிரேசிலுக்கான சிறிலங்காவின் தற்போதைய தூதுவருமான, ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, பிரேசிலில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தலைமையிலான, மனித உரிமை அமைப்புகள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை, ஜெனரல் ஜெகத் ஜயசூரிய வன்னி படைகளின் தளபதியாக இருந்தார்.

வவுனியாவில் உள்ள ஜோசப் முகாமில் இருந்து இவர் இராணுவ நடவடிக்கையை மேற்பார்வை செய்தார்..

2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில், ஜெனரல் ஜெகத் ஜயசூரியவின் மேற்பார்வையில் இருந்த இராணுவப் பிரிவுகளால், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும், காணாமல் ஆக்கப்பட்டதாகவும், சித்திரவதை செய்யப்பட்டதாகவும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிரேசிலுக்கான தூதுவரான ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, கொலம்பியா, பெரு, சிலி, ஆஜென்ரீனா, சுரினாம் ஆகிய நாடுகளுக்கான தூதுவராகவும் பணியாற்றுகிறார். இவருக்கு பிரேசிலில் இராஜதந்திர விலக்குரிமை உள்ளது.

ஆனால், ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பித்து, அவரது இராஜதந்திர விலக்குரிமையை நீக்கி, வெளியேற்றுவதற்கு பிராந்திய அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பிரேசில் மற்றும் கொலம்பியாவில், ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான வழக்குகள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன என்று, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள சட்டவாளர் கார்லோஸ் காஸ்ரேசனா பெர்னான்டஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“வரும் நாட்களில் ஆஜென்ரீனா, பெரு, சிலி ஆகிய நாடுகளிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்படும். சுரினாம் அதிகாரிகள் இந்த மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர்.

இது மறக்கப்பட்டு விட்ட ஒரு இனப்படுகொலை. ஆனால், இந்த முயற்சி ஜனநாயக நாடுகளை ஏதோ ஒன்றைச் செய்ய கட்டாயப்படுத்தும், இது போரின் ஆரம்பம் தான்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு தொடர்பு கொண்ட போது யாரும் பதிலளிக்கவில்லை என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *